கொரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு முயற்சியாக 2 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே ஒரு கருத்து எழுந்துள்ளது. அமெரிக்காவில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
அதிபர் ஜோ பைடனும் தனது பூஸ்டர் டோஸை இரு தினங்கள் முன்பு எடுத்துக்கொண்டிருந்தார். இதனால் இந்தியாவில் இந்த பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது. "பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இல்லை. எனவே, பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை. இப்போது, தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக போடுவதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒரு சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்." என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியிருந்தார்.
அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளது. 56% பேருக்குச் சோர்வும், 43% பேருக்குத் தலைவலியும் ஏற்படுகின்றன. 28% பேருக்குத் தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றே தெரிகிறது. இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே முழுமையாக சென்று சேராத நிலையில் அதற்குத்தான் முன்னுரிமை என்றும் பேச்சுவார்த்தையின் மூலம் அறிய முடிகிறது. எப்படியாகினும் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு அதனடிப்படையில் ஆய்வு நடத்திய பிறகே அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.