தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வது தடைப்பட்டு உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணவர்கள், கிராமபுற, மழைவாழ் பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியும் கிடைப்பது இல்லை.


இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கின. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அடுத்தடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வெளியிலும் மக்கள் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத சூழலில் பள்ளிகளில் மாணவர்களால் எப்படி அதை கடைபிடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.


இதனிடையே, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் 1,500 க்கும் கீழ் செல்லாத சூழலில் இந்த மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



அலுவலகங்கள், வணிகத் தலங்களில் பெரியவர்களே முறையாக கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல், கும்பலாக பலருக்கு கொரோனா பரவும் நிலையில், விபரம் அறியாத 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களால் எப்படி முறையாக கொரோனா விதிகளை கடைபிடிக்க முடியும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.


தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தாலும், பெரும்பகுதியினருக்கு இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது. அதுவும் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவே இல்லை. அதே போல் கொரோனா 3 வது அலை அக்டோபர் மாதம் இந்தியாவை தாக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஒருவேளை 3 வது அலை தாக்கினால் அதில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்து உள்ளனர்.


இத்தகைய சூழலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் 1 முதல் 12 ஆம் வகுப்புக்குள் பயிலும் மாணவ மாணவிகள் இருப்பார்கள். இந்த மாணவர்களுக்கு வீட்டிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்து மாணவர்களுக்கோ கொரோனா தொற்று பரவுமானால் அது மிகப்பெரிய சமூக பரவலுக்கு வித்திடும் அபாயம் இருக்கிறது.


அதே போல், 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரவலுக்கான அறிகுறிகள் தென்படுவது இல்லை. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டாலும், 90 சதவீதம் பேரால் அதை உடனடியாக கண்டறிய முடியாது. எனவே அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் என்ற அச்சமும் இங்கு எழுகிறது.