இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக 10 ஆயிரம் கடந்து பதிவான தினசரி பாதிப்பு இன்று 12 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். இந்தியாவில் மொத்தமாக 65 ஆயிரத்து 286 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,61,476 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,230 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.67 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 லிருந்து 65,286 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 19,398 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 6102 பேர், தலைநகர் டெல்லியில் 6046 பேர், உத்திர பிரதேசத்தில் – 4298 பேர், தமிழ்நாடு – 3563 பேர், ஹரியானாவில் – 4891 பேர், குஜராத்தில் – 2091 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 65,286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,30,419 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், உத்திர பிரதேசத்தில் 4 பேர், தமிழ்நாட்டில் 2 பேர், கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 2 பேர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. இந்தியாவில் தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சத்தை கடந்து பதிவானது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 35,000 ஐ கடந்து பதிவானது. இரண்டாம் அலையில் பலருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சனை எற்பட்டது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து பதிவானது. தற்போது பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்புகள் அதிகம் இல்லை என்றும் உயிர் பறிக்கும் ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.