டிக்டாக்கில் ஏதேனும் ஒரு வீடியோ அவ்வப்போது ட்ரெண்டாவது வழக்கம் அந்த வகையில் தற்போது கருப்பு டிகாஷன் காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் ஏழு நாட்களில் உடல் எடை குறையும் என்கிற வீடியோ வைரலாகி வருகிறது.
பால் கலக்காத பிளாக் காஃபியுடன் சிறிது லெமன் ஜூஸ் கலந்து சாப்பிட்டால் உடல் எடை வேகமாகக் குறைவதாக டிக்டாக்கில் அண்மையில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது. இதையடுத்து பலரும் இந்த வீடியோவை பின்பற்றி காஃபியில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வருகிறார்கள். லெமன் டீ குடித்துப் பழக்கப்பட்ட நமக்கு லெமன் காபி புதிதுதான். லெமன் டீ உடலுக்கு குறிப்பாக நுரையீரலுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. ஆனால் லெமன் காபி குடிக்கலாமா? டிக்டாக்கில் பரவிவருவது போல அதனால் ஏழு நாட்களில் உடல் இளைக்கும் என்பது உண்மையா? ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
‘எந்த உணவுடனும் எலுமிச்சை சாறை சேர்க்கும்போது அந்த உணவின் ஊட்டச்சத்து தண்மையை எலுமிச்சை இழக்கச் செய்யும். பொதுவாக பால் கலந்த டீ அல்லது காபியில் எலுமிச்சை கலந்தால் அது திரிந்துபோவது இதனால்தான். அதனால்தான் லெமன் டீயில் கூட பால் சேர்ப்பது இல்லை. அதற்கு பதிலாக புதினாவும் சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. அதே போல காபியில் எலுமிச்சை சாறு சேர்ப்பது என்றால் பால் கலக்காமல்தான் சேர்க்க வேண்டும். அவ்வாறு பருகலாம். ஆனால் இந்த காபியை சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ எனக் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம், ‘காபி தனியாகவும் லெமன் ஜூஸ் தனியாகவும் குடிப்பதை ஆய்வு செய்ததில் அது கணிசமாக உடல் எடையை குறைக்கும் பலனை அளிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே இரண்டும் சேர்த்து பருகினால் என்னவாகும் என்பது ஆய்வு ரீதியாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. அதனால் டிக்டாக்கில் வருவதை நம்ப முடியாது. மேலும் இதுபோல லெமன் சாறு பருகுவதோடு இல்லாமல் கூடவே சரியான டயட் பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தால்தான் உடல் எடை குறையும்’ என்றும் கூறுகின்றனர்.
உடல் எடையை குறுக்குவழியில் குறுகிய காலத்தில் குறைக்க முடியாது சரியான உடற்பயிற்சியும் கூடுதலாக நல்ல முறையான டயட் பழக்க வழக்கங்களும் தேவை. அப்படி எடையை குறைப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.