பசி இல்லாத ஜீவராசி இருக்கக்கூடுமோ?! உயிரின் இயல்பு பசி. ஆனால் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது தான் அது பசி உணர்வாக வெளியில் தெரியும். வயிற்றில் இரைச்சல், தலைவலி, எரிச்சல் என பலவகையிலும் பசியின் தாக்கம் தெரியவரும்.
ஆனால் சிலருக்கு எப்போது பார்த்தாலும் பசிக்கும். அதனை பாலிஃபேஜியா எனக் கூறுகிறார்கள். எப்போது பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். மேலும், அப்படி அடிக்கடி தோன்றுவதற்கான காரணங்களும் உண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1.சரிவிகிதத்தில் புரதத்தை உட்கொள்ளாதது :
உங்களுக்கு அடிக்கடி பசி எடுத்தால் உங்கள் உடலுக்குத் தேவையான புரதம் சேரவில்லை என்று அர்த்தம். பெரியவர்கள் தங்கள் எடையில் உள்ள ஒவ்வொரு கிலோவிற்கும் 0.75 கிராம் புரதத்தை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு 70 கிலோ எடையுள்ளவராக இருந்தால், ஒரு நாளைக்கு 52.5 கிராம் புரதத்தை உண்ண வேண்டும். இதுபோன்ற அளவில் உங்களுக்கு புரதம் அன்றாடம் சேராவிட்டால் எப்போதுமே பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
2.தூக்கமின்மை:
உங்களுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லை என்றால் அது உடல்நலனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தூக்கம் சரியாக இல்லாவிட்டால் மூளை பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படும். இது இதய நோய்கள், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சரியான தூக்கம் பசியைத் தூண்டும் க்ரெலின் ghrelin என்ற ஹார்மோனை சீராக இயங்கச் செய்யும். ஒரு சின்ன ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு இரவில் சரியான தூக்கம் இல்லாதவர்கள் மத்தியில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் அடுத்த நாளில் வழக்கத்தைவிட 14% அதிகம் உண்பது உறுதியானது. அதனால் தூக்கமின்மை பசி ஹார்மோன்களை கண்டபிடி செயல்படச் செய்கிறது.
3. நீர்ச்சத்து இழப்பு
உங்கள் உடலில் ஏற்படும் நீரிழப்பால் வரும் அதீத தாகம் மற்றும் அதீத பசிக்கு இடையில் வித்தியாசம் கண்டறிவது கடினம். இரண்டுமே நமக்கு கிரக்கம் மற்றும் சோர்வுநிலையை ஏற்படுத்தும்.
4. தேவையான அளவு கொழுப்பு சத்து சேரவில்லை
அடிக்கடி பசி ஏற்பட கொழுப்புச் சத்து குறைபாடும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கொழுப்பு என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரால் இன்றியமையாதது தான் என்றாலும், அதிகமான கொலஸ்ட்ரால் கூட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 20 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் நான்கு முதல் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தங்களில் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆகையால் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அவகாடோஸ், ஆலிவ் ஆயில், முட்டை, யோக்ஹர்ட் ஆகியனவற்றில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது.
5. டயட் பானங்களை தவிர்க்கவும்
டயட் உணவுமுறைகளை பின்பற்றும் பலரும் நம்பிக்கையாக வாங்கி குடிக்கும் டயட் சோடாக்களே உங்களுக்கு பசியை தூண்ட காரணமாகின்றன. இது உங்கள் மூளையை வேறு உணவிலிருந்து கலோரிகளை பெற்றுக் கொள்ள தூண்டுகிறது. இதன் விளைவாக பசி உணர்வு ஏற்பட்டு உடல் உணவு கேக்கிறது.
6. ஹைப்போக்ளைசீமியா
உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு குறைவதால் இது ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளவர்களுக்கும் இது ஏற்படுகிறது. இந்த பாதிப்புடைவர்கள் ஏதோ போதையில் இருப்பவர்களை போலவே காட்சியளிப்பர். மேலும், சரியாக நடக்க கூட முடியாது. சோர்ந்தே காணப்படுவார்கள்.இது அவர்களுக்கு அதீத பசியை ஏற்படுத்தும்.
7.சர்க்கரை நோயாளிகளுக்கு பசிக்கும்
டைப் 1 சர்க்கரை நோயளிகளுக்கு இது அதிகமான பசியை ஏற்படுத்தலாம். ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும்போது உலகத்தையே விழுங்கும் அளவு கூட பசி ஏற்படும். இது பசியோடு சேர்த்து சோர்வு, மயக்கம், அதீத வியர்வை, தாகம், எடை இழப்பு போன்ற பாதிப்புகளையும் கொடுக்கும்.
8. நார்ச்சத்து அவசியம்:
நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகுவதற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கும் அதிக நார்ச்சத்து (high-fiber foods) மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எல்லாத் தாவரங்களிலும் நார்ச்சத்து காணப்படும். நார்ச்சத்துக்கள் இரு வகையாக உள்ளது. அவை கரையக்கூடிய மற்றும் கரையமுடியாதவை ஆகும். இவ்வகை நார்ச்சத்து நிறைந்த உணவும் பசி ஹார்மோனை சீராக வைக்க உதவுகிறது.