மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

 

தமிழகத்தில் ஒரு காலத்தில் பிரதான கட்சியாக மதிமுக இருந்து வந்தது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ பிரிந்து வந்த பொழுது, தொண்டர்களுக்கான கட்சி மதிமுக, வாரிசு அரசியலுக்கு இடம் கிடையாது என தெரிவித்து வந்தார். தொடர்ந்து அரசியல் களத்தில், மதிமுக செயல்பட்டு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்க முடியாமலே இருந்து வருகிறது. அதேபோல் தேர்தலின் பொழுது கூட்டணிகள் மாறி , பலமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. மதிமுக பல்வேறு பகுதிகளில், அமைப்பு ரீதியாக வலுப்பெற்று உள்ளது என்பதையும் மறுத்து விட முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக வைகோ இருந்து வந்தார். வைகோவின் மேடை பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் அவர் பின்னால் சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..



 

துரை வைகோ

 

தற்போது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை தலைமை கழக நிலையை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவரது செயல்பாடு, பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் பேசியபோது , வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம் எனவும் இதில் விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.



 

முகநூல் பதிவால்

 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் , கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்து இருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில், நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு மதிமுக வலை பக்கத்தில் அவர் பதவியை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



 

இந்நிலையில் மாநில துணை பொதுச் செயலாளர் மு. ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர்பதிலை கண்ணிய குறைவாக பதிவு செய்வதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள், நகரம் , காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக தெரிவித்தனர். 



 

 

வளையாபதி கூறுவது என்ன?

 

இதுகுறித்து வளையாபதி நம்மிடம் தெரிவிக்கையில், ஆரம்பம் முதலே மதிமுகவில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஆனால் தற்பொழுது கட்சியில் சில கருத்து வேறுபாடு காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்கிறோம். ஆனால் கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக நீடிப்பேன். துறை வைகோ கோவில்பட்டியில் பேசிய பொழுது வயதானவர்கள் ஒதுங்கி இருந்தால், இளையோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பொருளில், வெட்டு ஒன்று துண்டு 2 என்பது என்னுடைய பாலிசி, மற்றவர்கள் வெளியேறலாம் என கூறியிருந்தார். அன்று அவர் கூறியபடியே, நான் வெளியேறுகிறேன் என தெரிவித்து விட்டேன். வைகோ உடனடியாக தலையிட்டு, இதுபோல செய்ய வேண்டாம் என்று கூறினார், நானும் முகநூலில் செய்திருந்த பதிவை எடுத்து விட்டேன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், 28 வருடமாக உழைத்தால் என்ன, இன்று என்ன செய்யப் போகிறீர்கள். மூத்த உறுப்பினர் என்று கூட பாராமல், மரியாதை இல்லாமல் பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சிலரை தவிர எல்லோரும் ராஜினாமா செய்து விட்டோம் என தெரிவித்தார்.

 



 

மதிமுகவின் முக்கிய செயல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கிய நிலையில் இந்த ராஜினாமா சற்று மதிமுகவிற்கு காஞ்சியில் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.