கேரளாவிலிருந்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் நிபா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவிலேயே தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாநிலமான கேரளாவில், கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவிவிடாமல் இருக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 8 பேரின் 24 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரிகள் எதிலும் நிபா வைரஸ் பாதிப்பு தென்படவில்லை என புனேவில் இருந்து சோதனை முடிவுகள் வந்து உள்ளதாக அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
”தொடர்ந்து நிபா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி சோதனை மேற்கொள்ள இருக்கிறோம். சுகாதார ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற உள்ளனர்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள அனைவருக்கும் நிபா சோதனை நடத்த முடிவு செய்து உள்ளோம். ஆர்-டிபிசிஆர் முறையிலும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.” என்றார்.
சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து கோழிக்கோட்டுக்கு வந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு நிபா தடுப்புப் பணிகளை கண்காணித்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இதுவரை 251 பேர் பட்டியலிடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 129 பேர் சுகாதாரப் பணியாளர்களாவார்கள். இந்த 129 சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். அதுபோல், 30 சுகாதார பணியாளார்கள் உட்பட 59 பேர் சிறுவனிடம் நெருக்கமாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. இந்த சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் ஒரு கிளினிக் மற்றும் 4 மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருபவர்கள்.
இதற்கு முன்னதாக நிபா வைரஸ் கேரளத்தில் பரவியபோது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, மற்ற மாநிலங்களுக்கு தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி இம்முறையும் கேரளம் நிபாவை வீழ்த்தும் என நம்புவோம்.