இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, கடந்த செப்டம்பர் 6-ம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி பிசிஆர் பரிசோதனை முடிவிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், செப்டம்பர் 10-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியின்போது அவர் அணியுடன் இருக்க மாட்டார் என்பது உறுதியானது. 


ரவி சாஸ்திரி எழுதிய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளி ஆட்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு பரவி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் கோலி பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பாதிப்பு இல்லை என முடிவில் தெரிவிக்கப்பட்டது.






முதலில் வெளியான லேட்ரல் ஃப்ளோ பரிசோதனையைத் தொடர்ந்து ஆர்.டி பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


பயிற்சியாளர்களும், வீரர்களும் புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பிசிசிஐ தரப்பில் இருந்து அனுமதி பெறாமல் சென்றுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கெடுத்தது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதால், இது குறித்து இந்திய அணியுடன் பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அப்போது, இந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இந்திய அணி வீரர்கள் செல்ல வேண்டாம் எனவும், இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிசிசிஐ தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக, சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான முடிவுகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நெகடிவ் என வந்ததை அடுத்து இன்று ஓவல் மைதானத்தில் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய அணியைச் சேர்ந்த அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.