சாதாரணமாக நம் வீட்டுத் தோட்டங்களில் தவறாமல் இடம் பிடிப்பது தான் இந்த ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி செடிகள். லேசாக தொட்டாலே போதும் அத்தனை வாசம் நம் கைகளில் ஒட்டிக் கொள்ளும். ஒரு இலையைப் பறித்து சுவைத்தால் சுர்ரென்று காரம் ஏறும். இதன் இலை நல்ல சதைப் பற்றுடையதாக இருக்கும். ஓமவல்லிதானே எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியும் எனக் கூறுகிறீரகளா? இல்லை என்று நாங்கள் சொல்கிறேன். கீழே உள்ளவற்றை படியுங்கள் உங்களுக்கே புரியும்.
சளி, இருமலுக்கு மருந்து:
சாதாரணமாக சளி பிடித்துக் கொண்டால் இருமல் இருந்தால் உடனே மருந்துகளை நாடாமல் கை வைத்தியமாக ஓமவல்லி கசாயம் குடிக்கலாம். அதை எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா? 10 முதல் 12 இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். முக்கிய குறிப்பு அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும். பின்னர் அதை எடுத்து ஆறவிடுங்கள். இளஞ்சூட்டுக்கு வந்தபின்னர் பருகுங்கள். சாதாரணா சளி, இருமல் உடனே பறக்கும். ஒருவேளை இந்தக் கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் தேன் சேர்த்து கொடுக்கலாம்.
ஓமவல்லி பக்கோடா:
அட இது புதுசா இருக்கே என்று நினைக்கிறீர்களா? ஆமாம் உண்மை தான் கொஞ்சம் புதுசு தான். கடலை மாவில் இதனை சேர்த்து இந்தக் கலவையை வழக்கமாக பக்கோடா போடுவது போல் எண்ணெய்யில் பொரித்து எடுங்கள் பக்கோடா தயார். மழைக்காலத்தில் ஓமவல்லி பக்கோடா.. அடடா யோசித்துப் பாருங்கள்.
சட்னி, டிப் செய்யலாம்:
என்னது ஓமவல்லியில் சட்னியா எனக் கேட்கிறீர்களா? ஆமாங்க செய்யலாம். இளசாக இருக்கும் ஓமவல்லி இலைகளை வானலியில் வறுத்து அதை பொடித்து தயிருடன் சேர்த்தால் சுவையான ஓமவல்லி டிப் தயார். புதினா, மல்லி துவையல் அரைக்கும் பொருட்களுடன் புதினா, மல்லிக்கு பதில் ஓமவல்லி இலைகள் கொஞ்சம் சேர்த்து அரைத்துப் பாருங்கள். சட்னி ருசி அள்ளும்.
பச்சை ஜூஸ் வகைகள்:
பழச்சாறு அல்லது காய்கறி ஜூஸ் எது செய்தாலும் அதில் ஒன்றிரண்டு இலை ஓமவல்லி போட்டுப் பாருங்களேன். அட அட அட ருசி சும்மா அள்ளும்.
ஓமவல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை வயிறு உபாதைகளை சரி செய்யும். பசியைத் தூண்டும், ஜீரண மண்டலத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ளும்.