வாடகை தாய் மூலம் தங்களின் குழந்தையை வரவேற்று இருக்கிறார்கள் ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்திருக்கும் ப்ரியங்கா சோப்ரா, “வாடகைத்தாய் மூலம் எங்களின் குழந்தையை வரவேற்றிருக்கிறோம். இந்த விஷயத்தை உங்களுடன் பகிரும் இந்த நேரத்தில், இந்த விஷயத்தில் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும், வெளியையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தும் நேரம் இது. நன்றி” என்று கூறியிருக்கிறார்.  






முன்னேற்றத்துக்கும், காதலுக்கும், திருமணத்துக்கும், மகிழ்ச்சிக்கும் எந்த வயதும் இல்லை என எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கும் ப்ரியங்கா, இப்போது இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறார். ரசிகர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் ப்ரியங்கா-ஜோனஸ் தம்பதிக்கு தங்களின் வாழ்த்து மழையைக் குவித்து வருகிறார்கள். 


இந்த நிலையில் வாடகை தாய் மூலம் பிரபலங்கள் குழந்தையை பெற்றெடுக்க காரணம் என்ன? வாடகை தாய் மூலம் தனது குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் எப்போது சம்மதிக்கிறாள்? இதற்காக பெரும் தொகை செலவழிக்கப்படுவதாக சொல்வது உண்மையா? போன்ற கேள்விகளை பிரபல மனநல ஆலோசகரும், மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகராகவும் இருக்க கூடிய டீனா அபிஷேக் அவர்களிடம் ஏபிபி நாடு வழியாக முன்வைத்தோம்.  





இது குறித்து அவர் கூறும் போது, “தம்பதிகள் வாடகை தாயிடம் செல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பிரபலங்கள் வாடகை தாயை அணுகுவதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். அதில் நாம் தலையிட முடியாது. 


ஒரு தம்பதி குழந்தை பேறு வேண்டி மருத்துவரை அணுகும் போது, முதலில் இயற்கையாக கருத்தரிப்பு நடப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வார்கள். இது தோல்வி அடையும் பட்சத்தில், கருத்தரிப்பு நடக்காததற்காகான காரணங்களை ஆராயப்படும். 




சில பெண்கள் கர்ப்பமடைந்தாலும், அவர்களுக்கு அந்த நேரத்தில் உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரக்காது. அதனை சரிசெய்ய ஹார்மோன்கள் ஊசி வழியாகவோ, மாத்திரைகள் வழியாகவோ கொடுக்கப்படும். 


இதுவும் தோல்வி அடையும் பட்சத்தில், IUI முறையை கையாள்வார்கள். IUI என்றால் பெண்ணின் மாதவிடாய் முடிந்து கருமுட்டை வெளியே வரும் நேரத்தை பார்த்து ( Follicular Study)கணவரின் விந்தணு அந்த முட்டையில் செலுத்தப்படும். இதனை 4,5 முறை முயற்சி செய்து பார்ப்பார்கள்.




இதுவும் தோல்வியும் அடையும் பட்சத்தில்  IVF முறையை கையில் எடுப்பார்கள். இதில் பெண்ணின் முட்டையுடன் விந்தணுவை புகுத்தி, பெண்ணின் உடலுக்குள் அனுப்புவார்கள். அது கர்ப்பபையில் சென்று தங்கும். இதைத்தான் Implantation/கரு தங்குதல் என்று கூறுகிறோம். இந்த முறையை மேற்கொண்ட பின்னரும் சிலருக்கு குழந்தை தங்காது. இதற்கு அடுத்த படியாக கர்ப்பபையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்க்கப்படும். 




குறைபாடுகள் இருக்குமாயின், சம்பந்தப்பட்ட பெண்ணால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. இதற்கடுத்த படியாகத்தான் வாடகை தாய் மூலம்  குழந்தையை பெற்றெடுக்கும் முறையானது கையில் எடுக்கப்படும். 


பிரபலங்களை பொருத்தவரை வயது கடந்து திருமணம் செய்து கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் அவர்கள் குழந்தையை பெற்றெடுக்க கருமாற்று முறையை (Embryo Transplantation)பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.




அது எப்படி செய்யப்படும் என்றால், இளம் வயதிலேயே தன்னுள் இருக்கும் கருமுட்டையை எடுத்து அதனை அதற்கான ஆய்வகத்தில் கொடுத்து உறைய வைத்து விடுவார்கள். இப்படி இளவயதிலேயே அது எடுக்கப்படுவதற்கான காரணம், அப்போது கருமுட்டை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். வயது மூப்படைந்த பின்னர் குழந்தையை பெற்றெடுக்கும் போது குழந்தை பிறப்பிலே குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 




இதில் வயது மற்றும் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து கருமுட்டைக்கு சொந்தமான பெண் தனக்கு குழந்தை தேவைப்படும் பட்சத்தில், அந்த முட்டையுடன் கணவரின் விந்தணு புகுத்தப்பட்டு குழந்தை பெற்றெடுக்கப்படும். 


அந்த விருப்பம் மாறும் பட்சத்தில்,வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றெடுக்கப்படும். இந்த முறையை பின்பற்றி குழந்தை பெற்றெடுக்கப்படும் போது எந்த வித பாதிப்பும் வராது.  இதில் இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வாடகை தாயின் மூலம் குழந்தையை பெற்றாலும், அந்தக் குழந்தைக்கு கருமுட்டைக்கு சொந்தமான பெண்ணால் தாய்ப்பால் கொடுக்க முடியும். அதற்கான வழிமுறையை ( Induce Lactation)அந்தப் பெண் மேற்கொள்ள வேண்டும். இந்த கலாச்சாரம் தற்போது வளர்ந்து வருகிறது.




அழகு குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறான நடைமுறையை பிரபலங்கள் மேற்கொள்வதாக சொல்லப்படுகிறதே? 


பெரும்பாலும் அது ஒரு காரணமாக இருப்பதில்லை. காரணம் இழந்த அழகை மீண்டும் எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படி நினைத்தாலும் அது அவர்களது உடல். அதில் என்ன தவறு இருக்கிறது. இது வெளிநாடுகளில் மிக இயல்பாக நடக்கிறது. ஆனால் இங்கு அது வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. அது தவறு.  


வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுக்க சம்பந்தப்பட்ட வாடகை தாய் எவ்வளவு பணம் பெறுவார்கள்? 


வாடகை தாய் சம்பளமானது, சம்பந்தப்பட்ட தம்பதியின் பொருளாதார நிலையை பொருத்தது.