கருவில் இருக்கும் குழந்தையின் முன் கைக்கு நடுவில் இருக்கும் ரத்த நாளங்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, குழந்தை வளர வளர மறைந்து கொண்டிருந்த நிலையில் இருந்து, தற்போது நிரந்தரமாக இருக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தற்போதைய பெரியவர்களின் கைகளுக்கு ரத்தம் இன்னும் அதிகமாக செல்வதற்கான வழி உருவாகியுள்ளது. 


Journal of Anatomy என்ற பெயரில் பிரசுரிக்கப்படும் மருத்துவ ஆய்விதழில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. அடிலைட் பல்கலைக்கழகம், ப்லிண்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரையில், கடந்த 18ஆ நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவர்களின் முன் கைப் பகுதியில் இந்த ரத்த நாளம் இல்லை எனவும், சமீபத்திய அவர்களது ஆய்வுகள் இந்த ரத்த நாளத்தின் இருப்பு தற்காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 



ப்லிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேகான் லூகாஸ் என்ற ஆய்வாளர், இந்த ரத்த நாளம் 1880ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுள் 10 சதவிகித மக்களிடம் பரவலாக இருந்ததாகவும், இருபதாம் நூற்றாண்டில் பிறந்த 30 சதவிகித மக்களிடம் இதே ரத்த நாளத்தைப் பரவலாகக் காண முடிகிறது எனவும் கூறியுள்ளார். இதன்மூலம், மிகக் குறைவான கால கட்டத்திற்கும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 


மனிதன் கருவில் இருக்கும் போது, புதிதாக வளரும் கைகளுக்கு அதிகளவிலான ரத்தம் பாய வேண்டும் என்பதற்காக, கைகளுக்கு நடுவில் இந்த ரத்த நாளம் உருவாகிறது. 8 வாரங்களுக்குப் பிறகு, போதிய ரத்தம் பாய்ந்த பிறகு, இந்த ரத்த நாளம் படிப்படியாக மறைந்து போகிறது. 



இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய சுமார் 80 உடல்களின் கைகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் ஆய்வு செய்யப்பட்டவர்கள் 51 வயது முதல் 101 வயது வரை உள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்களை முன்வைத்து, இந்த ஆய்வு முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. 


கடந்த காலங்களை விட, தற்போதைய பெரியவர்களின் கைகளில் ரத்தம் இன்னும் அதிகமாகப் பாய்கிறது என இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இது மனிதர்களுக்கு உடலில் ரத்தம் இன்னும் அதிகமாகப் பாய வேண்டும் என இயற்கை தேர்வு நிகழ்ந்திருப்பதைக் குறிக்கிறது. இதனால் பயன் அதிகமாக இருந்தாலும், carpal tunnel syndrome என்ற நோயின் மூலமாக, கைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் 2100ஆம் ஆண்டுக்குள், பெரும்பான்மையான மக்களுக்கு இந்த ரத்த நாளம் வளர்ச்சி பெற்றிருக்கும் என இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.