இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 56 ரன்கள் குவித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து நேற்று மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த புஜாராவும், விராட் கோலியும் மிகவும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். தொடர்ந்து சொதப்பலனா ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா நேற்று தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆண்டர்சன், ராபின்சன், கிரெக் ஓவர்டன், சாம்கரன், மொயின் அலி என்று அனைவரது பந்தையும் இந்த ஜோடி நிதானமாக எதிர்கொண்டது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 215 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 91 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டம் தொடங்கியவுடனே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் பந்துவீச்சில் புஜாரா எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அவர் 189 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். புஜாரா மற்றும் கோலி இருவருமே இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் சேர்த்தனர்.
புஜாரா தான் ஆடிய கடைசி 10 இன்னிங்சில் முறையே 15, 21, 7, 0, 17, 8, 15, 4, 12, 9, 45 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், புஜாரா மீது கடுமையான விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. இந்த நெருக்கடியான நேரத்தில் புஜாரா 91 ரன்கள் குவித்து அணியின் நெருக்கடி குறைய உதவியுள்ளார். மேலும், 10 இன்னிங்சிற்கு பிறகு புஜாரா அரைசதம் அடித்துள்ளார்.
விராட்கோலி கடைசியாக தான் ஆடிய 9 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், இன்றைய ஆட்டம் மூலமாக அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் விராட் கோலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 125 பந்துகளில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது ரஹானே 10 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 239 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது. இந்திய அணியைப் பொருத்தவரை இன்னும் வலுவான பார்டனர்ஷிப் அமைந்தால் மட்டுமே இந்திய அணியால் மீண்டு வர முடியும். இந்திய அணியில் இன்னும் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர்.
முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் ஜோ ரூட் சதத்தாலும், ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 432 ரன்களை குவித்தது.