காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால்,  தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பொழிவு அதிகரித்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களுக்கு முன், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 5,106 கன அடியும், கபினியிலிருந்து வினாடிக்கு 5000 கன அடி என மொத்தம் 10,106 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.  காவிரி ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர்வரத்து அதிகரித்து, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

 


 

தொடர்ந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுட்கு முன் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து சரிந்து, வினாடிக்கு 7,000 கன அடியாக குறைந்தது.  ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பால், இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் மெயினருவி, சினி அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. 

 

 

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,106 கன அடியிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் வினாடிக்கு 9,500 கன அடியும், கபினியிலிருந்து வினாடிக்கு 5100 கன என மொத்தம் 14, 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து, நாளை  படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கி சுற்றுலா தளங்களை திறக்க அனுமதியளித்துள்ளது. ஆனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் என மாறி, மாறி வருவதால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் பொதுமக்களின்றி வெறிச்சாடி கிடக்கிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தொழிலாளர் கடந்த ஆறு மாதங்களாக வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.