புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் 73 வயது முதியவர்ஒருவர் எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, இறந்தவர் நாள்பட்ட நுரையீரல் நோயாலும் (chronic obstructive pulmonary disease) இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் எச்3என்2 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் முதன்முதலில் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 82 வயது முதியவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 10 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாட்டில் 451 பேர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரை 119 பேர் H3N2 வைரஸாலும் 324 பேர் H1N1 வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற நகரங்களில் என்ன நிலை?
மகாராஷ்டிரா சுகாதாரத் துறையின்படி, H1N1 தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் H3N2 தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ஒருவருக்கு h3n2 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
H3N2 வைரஸ் என்பது non human இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும், இது பொதுவாக பன்றிகளில் பரவுகிறது. பன்றியிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. இதற்கான அறிகுறிகள் பருவ கால காய்ச்சல் வைரஸ்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும், மேலும் காய்ச்சல், இருமல், சளி போன்றஅறிகுறிகளும், உடல் வலி, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பொது சுகாதார நடவடிக்கைகள்:
நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான www.mohfw.nic.in மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளமான www.ncdc.gov.in ஆகியவற்றிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பால் ஒசெல்டாமிவிர் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொது சுகாதார மையங்களில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள அமைச்சகங்களுக்கிடையிலான கூட்டத்திற்கு 2023 மார்ச் 11 அன்று நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில்காய்ச்சல் பரவும் தன்மை, மாநிலங்களுக்கு இது தொடர்பாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.