New Year Facts: ஆண்டிற்கு 12 மாதங்கள், வாரத்திற்கு 7 நாட்கள், மணிக்கு 60 நிமிடங்கள் என ஒதுக்கப்பட்டதற்கான காரணம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


நெருங்கும் புத்தாண்டு:


2024ம் ஆண்டு நம்மிடம் இருந்து விடைபெறவும், 2025 எனும் புத்தாண்டிற்குள் நாம் நுழையவும் இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ளது. நேற்று தான் தொடங்கியது போன்று இருந்த 2024ம் ஆண்டு அதற்குள் நம்மை கடந்திருப்பது, நேரம் எவ்வளவு வேகமாக செல்கிறது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்டிற்கு 12 மாதங்கள், வாரத்திற்கு 7 நாட்கள், மணிக்கு 60 நிமிடங்கள் என நேரம் பிரிக்கப்பட்டது எப்படி என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காரணம் என்னவென்று சிந்தித்து இருக்கிறீர்களா? அவற்றிற்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.



ஆண்டுக்கு 12 மாதங்கள் ஏன்?


ஆரம்ப காலத்தில் நாட்காட்டியில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், ஆண்டிற்கு 12 சந்திர சுழற்சிகள் இருந்தன. எனவே, சந்திரனின் கட்டங்களுடன் நாட்காட்டியை வரிசைப்படுத்த ரோமானிய அரசர் நுமா பாம்பிலியஸ் முடிவு செய்தார். அதன் விளைவாக பருவங்களுடன் ஒத்திசைக்க 12 மாதங்கள் உருவானது. அதன்படி, நாட்காட்டியில் புதியதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் இணைந்தன. உண்மையான ஐந்தாவது மற்றும் ஆறாவது மாதங்கள் ஜூலியஸ் சீசர் மற்றும் அவரது வாரிசான அகஸ்டஸ் ஆகியோரின் நினைவாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மறுபெயரிடப்பட்டன. இந்த இரண்டு மாதங்களும் ரோமானிய தலைவர்களின் பெயரை கொண்டிருப்பதால், அவற்றின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்க அதிகபட்ச நாளான 31 நாட்கள் வழங்கப்பட்டது.


அதேநேரம், இந்த நாட்காட்டியில் இருந்த 355 நாட்களை காட்டிலும், பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர கூடுதல் காலம் எடுத்துக் கொண்டது. அதனை ஈடுசெய்ய ஜூலியன் சீசர் வானியலாளர்கள் புதிய நாட்காட்டியை உருவாக்கினர். அதன்படி தான், ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறையும் பிப்ரவரியில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டு, லீப் ஆண்டு உருவானது.


வாரத்தில் ஏழு நாட்கள் ஏன்?


வாரத்திற்கு 7 நாட்கள் என்பது வானியல் திறமை பெற்ற பாபிலோனியர்கள் மற்றும் கிமு 2300 இல் அக்காட் அரசர் I சர்கோன் ஆகியோரால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏழு என்ற எண்ணை கடவுளாக வணங்கினர். மேலும் தொலைநோக்கி கண்டறியப்படுவதற்கு முன் முக்கிய வானியல் கோள்கள் (சூரியன், சந்திரன் மற்றும் வெறும் கண்களுக்கு புலப்படும் ஐந்து கிரகங்கள்) 7 ஆகவே கருதப்பட்டன. அதன்படி, வாரத்திற்கு 7 நாட்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


நாள் 24 மணிநேரமாக பிரிக்கப்பட்டது ஏன்?


முதன்முதலில் பண்டைய எகிப்தியர்கள் தான் ஒரு நாளை 24 மணிநேரமாக பிரித்து செயல்பட்டனர். அவர்கள் பகலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை 12 மணி நேரமாகவும், இரவை சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை 12 மணி நேரமாகவும் பிரித்தனர்.


நிமிடங்கள், மணி நேரங்கள் 60 ஆக பிரிக்கப்படுவது ஏன்?


மணிநேரத்தை 60 வினாடிகள் கொண்ட 60 நிமிடங்களாகப் பிரித்தபோது, ​​அதன் கணித வசதிக்காக 60 என்ற எண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான சிறிய எண்களால் மீதியின்றி வகுக்கப்படுகிறது. 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20 மற்றும் 30.