Diabetes and Alcohol Intake: சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மது எனும் விஷம்:
மனிதன் வாழ்வில் மது அருந்துவது என்பது எந்த ஒரு சூழலிலும் தீய பழக்கமாகவே கருதப்படுகிறது. காரணம் அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் தான். இதுதொடர்பான பல ஆராய்ச்சி அறிக்கைகளும் வெளியாகியுள்ள, வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. அப்படி இருந்தும், இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது சமூக செயல்பாடாக (Social Activity) மாறிவிட்டது. இந்நிலையில், சக்கரை நோயாளிகள் ஏன் மது அருந்தக் கூடாது, மது அருந்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மருத்துவரின் பதிவு:
பிரகாஷ் மூர்த்தி எனும் மருத்துவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ புத்தாண்டின் முதல் நாளிலேயே , முதல் சர்க்கரை நோயாளிக்கான காயத்திற்கு சிகிச்சை. நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில், கேக் மற்றும் மது அருந்தியதன் விளைவாக , ஏற்கனவே காலில் இருந்த காயத்திலிருந்து இன்று காலை எழுந்தவுடன் வலி மற்றும் துர்நாற்றம் வந்ததாகக் கூறினார். அவர் கூறியவாறே காயத்திலிருந்து சீவு மற்றும் துர்நாற்றம் வந்தது. அதை சுத்தம் செய்து மருந்து தடவி கட்டு போட்டேன்.
" நேற்று 170 இருந்த சுகர் இன்று 240 என உயர்ந்தது. ஒரே நாளில் எப்படி சார் இவ்வளவு உயரும்? ஒரே நாளில் எப்படி சார் காயத்திலிருந்து துர்நாற்றம் வரும்" என்று அவர் ஆச்சர்யமாக கேட்டார் . மது குடித்தால் கிட்னி பாதிக்கும், லிவர் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், மது சர்க்கரை நோய்க்கு எதிரி என்பது பலரும் அறியாத ஒன்று.
ஆல்கஹால் கணையத்தைப் பாதிக்கும் ( pancreas)
சர்க்கரை அளவை ஒரே நாளில் பல மடங்கு உயர்த்தும் ( High risk for diabetics)
காலில் புண் ஏற்பட்டால், குணமாக தாமதமாகும்.( Diabetic wound )” என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு தான், சக்கரை நோயாளிகள் ஏன் மது அருந்தக் கூடாது என்ற தேடலை தூண்டியது. அதன் மூலம் கிடைத்த தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரத்தத்தில் குறையும் சர்க்கரை அளவு:
ரத்தத்தில் சர்க்கரையை சாதாரண அளவில் வைத்திருக்க உதவும் வகையில், கல்லீரல் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிடுகிறது. ஆனால் மது அருந்தும்போது அதனை செயலாக்குவதற்காக, கல்லீரல் குளுக்கோஸை வெளியிடுவதை நிறுத்துகிறது. இதன் விளைவாக, உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாகக் குறையக்கூடும். இது லோ-சுகர் அபாயத்தை ஏற்படுத்தும். உணவு உண்ணாமல் குடிப்பதும் இந்த ஆபத்தை பெரிதும் அதிகரிக்கிறது. நீங்கள் கடைசியாக பானத்தை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களுக்கு ரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான ஆபத்து இருக்கும். நீங்கள் ஒரே நேரத்தில் அதிக பானங்களை அருந்தினால், உங்கள் ஆபத்து அதிகமாகும். இதனாலேயே சாப்பாட்டுடன் மட்டும் மது அருந்த வேண்டும், அளவாக மட்டுமே குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவதன் ஆபத்துகள்:
மது அருந்துவது ஆரோக்கியமானவர்களைப் போலவே நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரேமாதிரியான உடல்நல அபாயங்களைக் கொண்டுள்ளது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சில கூடுதல் ஆபத்துகளும் உள்ளன.
- மதுபானங்களான பீர் மற்றும் இனிப்பு கலந்த பானங்கள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.
- ஆல்கஹால் நிறைய கலோரிகளைக் கொண்டுள்ளது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.
- ஆல்கஹால் கலோரிகள் கல்லீரலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. கல்லீரல் கொழுப்பு கல்லீரல் செல்களை அதிக இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது மற்றும் காலப்போக்கில் உங்கள் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும்.
- ரத்தச் சர்க்கரைக் குறைவின் அறிகுறிகள் ஆல்கஹால் போதையின் அறிகுறிகளுடன் மிகவும் ஒத்தவை. நீங்கள் மயங்கி விழுந்தாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் போதையில் இருப்பதாக நினைத்து தேவையான முதலுதவிகள் கிடைக்காமல் உயிருக்கே ஆபத்தாகலாம்.
- போதையில் இருப்பது லோ சுகர் அறிகுறிகளைக் கண்டறிவதை கடினமாக்குகிறது மற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.