Sunita Williams Nasa Astronauts: விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு, உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தரையிறங்கிய ட்ராகன் விண்கலம்:

அடுத்த வாரம் வீட்டிற்கு திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், மீண்டும் இயற்கை சுவாசத்தை எடுக்க 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். விண்வெலியில் தங்குவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புதியது அல்ல. ஆனால், வெறும் எட்டு நாட்கள் என்ற திட்டத்தோடு சென்றவர்கள் மாதக்கணக்கில் தங்க நேரிட்டால், அவர்கள் மனதளவில் தயாராகி இருப்பார்களா? என்பதே கேள்வி ஆகும். விண்வெளிப் பயணம் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அத்தகையை சூழலை கடந்து தான், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்பியுள்ளனர். 

Continues below advertisement

45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு:

சர்வதேச விண்வெளி மையத்தில் ஈர்ப்பு விசை என்பதே இன்றி, ஆராய்ச்சியாளர்கள் வாழ்கின்றனர். அதன் காரணமாகவே பூமிக்கு வந்ததும், இங்கு நிலவும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப உடனடியாக செயல்பட முடிவதில்லை. அதன் விளைவாகவே ஸ்ட்ரெட்சரை கொண்டு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அடுத்த 45 நாட்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். முழு உடற்தகுதியும் பெற்ற பிறகே அவர்கள்,  நாசா கண்காணிப்பு மையத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள். சிலர் முழு உடற்தகுதியும் பெற 6 மாதங்கள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. 

விண்வெளியில் இருக்கும்போது உடலில் என்ன மாற்றம் ஏற்படும்?

விண்வெளி வீரர்களுக்கு மிகப்பெரிய சவால், மனித உடலில் உள்ள திரவங்கள் ஈர்ப்பு விசை இல்லாமல் மேல்நோக்கி மிதந்து, முகங்கள் வீங்கி, சைனஸ்கள் அடைத்து, கால்கள் பலவீனமடைவதைக் கையாள்வதுதான். புவியீர்ப்பு விசை இல்லாமல், விண்வெளி வீரர்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். புவியீர்ப்பு விசை இல்லாததால், விண்வெளி வீரர்கள் நகரும் போது அவர்களின் எலும்புகள் மற்றும் தசைகள் இயற்கையாகவே வேலை செய்யாது.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாமல், எலும்புகள் மாதத்திற்கு சராசரியாக 1% முதல் 1.5% வரை தாது அடர்த்தியை இழக்கின்றன என்று நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர் தசை நிறை இழப்பு அல்லது கைகால்களில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது 2 முதல் 3 அங்குல உயரம் வளர வாய்ப்புள்ளது (இருப்பினும் அவர்கள் பூமிக்குத் திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு அவர்களின் அசல் உயரத்திற்குத் திரும்புவார்கள்).

விண்வெளி வீரர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாவிட்டால் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவைப் பின்பற்றாவிட்டால், அவர்கள் பூமியில் இருப்பதை விட வேகமாக தசை நிறையை (Muscle Density) இழப்பார்கள். அதனால்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் கடுமையான 2 மணிநேர தினசரி உடற்பயிற்சி நடைமுறைகளைக் கொண்டுள்ளனர். ஈர்ப்பு விசையின்மை கண் இமைகளின் வடிவத்தை தட்டையாக்கி பார்வை பிரச்சினைகளை ஏற்படுத்தும். கண்களில் ஏற்படும் எந்தவொரு எதிர்மறையான தாக்கமும் விழித்திரையில் மாற்றங்களை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். 

பூமிக்கு திரும்பும்போது உடலில் என்ன மாற்றம் ஏற்படும்?

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தரையிறங்கிய உடனேயே, உள் காதில் சமநிலையை பராமரிக்கும் உறுப்பான வெஸ்டிபுலர் அமைப்பு - ஈர்ப்பு விசையால் உடனடியாக குழப்பமடையும். இது விண்வெளி வீரர்கள் நடப்பதை கடினமாக்குகிறது. விண்வெளி வீரர்கள் " குழந்தை கால்களை (Baby Feet) " அனுபவிப்பார்கள். பல மாதங்கள் நடக்காமல் இருந்த பிறகு அவர்களின் உள்ளங்கால்கள் மிகவும் மென்மையாக மாறும், எனவே பூமியில் மீண்டும் நடக்கும்போது அவர்கள் வலியை உணரலாம்.

அதிக வேலை தேவைகள் மற்றும் வழக்கமான 24 மணி நேர பகல்-இரவு ஒளி சுழற்சியை இழப்பது போன்ற காரணிகள் விண்வெளியில் இருக்கும்போது விண்வெளி வீரர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தூக்கமும் ஒரு முக்கியமான பிரச்சினை. விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை இல்லாத படுக்கையில் ஓய்வெடுக்க ஒரு சுவரில் கட்டிக்கொள்ள வேண்டும். மேலும் விண்வெளி சூழல் ஒருபோதும் முழுமையான அமைதியாகவோ அல்லது இருட்டாகவோ இருக்காது. இது ஆராய்ச்சியாகளில் இயல்பான வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

மேற்குறிப்பிடப்பட்ட பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவதற்கு தான் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 ஆராய்ச்சியாளர்களும், அடுத்த 45 நாட்களுக்கு நாசாவிலேயே மருத்துவ கணகாணிப்பில் பராமரிக்கப்பட உள்ளனர்.