வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே எடுக்கப்பட்டது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த காரணத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாகக் கூறி, அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.


மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த வீடியோவை 3.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 




உண்மை என்ன?


இந்த வைரல் வீடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டது போல் உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டவை அல்ல. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வாக்குச்சாவடி மையம் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது.


வீடியோவில் இதை கவனித்தீர்களா?


வீடியோவை பார்க்கும்போது, அந்த காட்சியில் பல இடங்களில் ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீடியோவில் நபர் ஒருவர் பேசுகிறார். அதற்கு பின்புறத்தில் மத்திய பிரதேசம் என இந்தியில் எழுதப்பட்டிருந்தது. 




பின்புறத்தில் உள்ள தடுப்பு ஒன்றில் MP PWD என்ற குறி இருந்தது. (MP PWD என்றால் மத்திய பிரதேச பொதுப்பணித்துறை)


இந்த இரண்டு குறிப்புகளும் அந்த வீடியோ உத்தரப் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. மத்தியப் பிரதேசத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக்கியது.


வீடியோவில் இருந்த நபர் யார்?


வீடியோவில் உள்ள நபரை பற்றி தெரிந்து கொள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விஷ்ணுகாந்த் திவாரியின் உதவியை நாடினோம். வீடியோவில் இருப்பவர் பத்திரிகையாளர் இசா அகமது என அவரின் மூலம் தெரிந்து கொண்டோம்.


அகமதின் பேஸ்புக் பக்கத்தில் அவரது சுயவிவரத்தைக் கண்டுபிடித்து, வைரலான வீடியோவில் காணப்பட்ட நபருடன் அவரது படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டிலும் பல ஒற்றுமைகள் இருந்தன. அகமதை தொடர்பு கொண்டு பேசியபோது, வீடியோவில் இருப்பது தான்தான் என அவர் உறுதி செய்தார்.




போபால் நரேலா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 40ஆவது வார்டில் எடுக்கப்பட்ட வீடியோ என அகமது உறுதி செய்தார். 


முடிவு:


வாக்குச்சாவடி மையத்தில் முறைகேடு நடந்ததாக வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையானதா என்பது பற்றி உறுதி செய்ய இயலவில்லை. ஆனால், சமூக வலைதளத்தில் குறிப்பிட்டது போல் இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக The Quint என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.