காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை நீக்கிவிடுவோம்” என்று அவர் இந்தியில் பேசுவதைக் கேட்கலாம். இந்நிலையில், ராகுல் காந்தி எங்கு பேசினார்? என்ன பேசினார்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


வைரலாகும் ராகுல் பேச்சு:


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கியது பற்றி பேசியதன் மூலம், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார் என சமூக ஊடகத்தில்  பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.  


இந்நிலையில் , வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தோம். இந்த வீடியோவானது, ஏப்ரல் 29, 2024 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் யூடியூப் சேனலில் "நேரலை: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஸ்ரீ ராகுல் காந்தி பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்" என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது.  13:19 நேர அளவில் , ராகுல் காந்தி சொல்வதைக் கேட்கலாம்,  "பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள்  “ ஒருவர் அல்ல, பலர் சொன்னார்கள், எங்கள் அரசாங்கம் அமைந்தால், இந்த முறை அரசியலமைப்பை நீக்குவோம் என்று” என பாஜகவினர் கூறுவதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.



உண்மை என்ன?


ஆனால் சிலர் , எங்கள் அரசாங்கம் அமைந்தால், இந்த முறை அரசியலமைப்பை நீக்குவோம் என்ற பகுதியை மட்டும் தனியாக எடுத்து பரப்பி வருகிறார்கள்.  இந்த வீடியோவின் ஒரு பகுதியானது, 13:26 முதல் 13:34 வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் ஆன்லைனில் பகிரப்பட்டது. ராகுல் காந்தி தனது உரையில், அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு உரிமைகளையும் இடஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது என்றும், அதை ஒழித்தால், "எனது ஆதிவாசி ( பழங்குடியினர் ) சகோதரர்களுக்கு, உங்கள் நீர், காடு மற்றும் நிலம், உங்கள் வாழ்க்கை முறை, மொழிகள் மறைந்துவிடும் என்று நான் கூற விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.


பகிர வேண்டாம்:


முழு நீள வீடியோவில், அரசியல் சட்டத்தை மாற்றுவது குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்ததாக ராகுல் காந்தி விமர்சித்ததை பார்க்க  முடிகிறது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை நீக்குவோம் என ராகுல் காந்தி கூறவில்லை என்பது புலனாகிறது.  


எனவே ராகுல் காந்தி அரசியலமைப்பை மாற்றுவோம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவானது, சில பகுதிகளை மட்டும் காட்சிப்படுத்தப்படுகிறது. ராகுல் காந்தி அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறவில்லை. எனவே இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என தெரிவித்து கொள்கிறோம். 


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.