Fact Check: பரப்புரையின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதாக, பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவாலை அறையும் வீடியோ:


ரோடு ஷோவின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஒருவர் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை டிபி ஆக வைத்திருக்கும்,  தங்கராஜ் என்பவர் தனது சமூக வலைதள கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன். ஜெயில் கைதி கெஜ்ரிவால். போட்டான்பார் ஒரு போடு நம்ம ஆளு" என பதிவிட்டுள்ளார்.  அதோடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் கன்னத்தில் தாக்கும் காணொலி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, பலரும் சமூக வலைதளங்களில் அந்த காணொலியை பகிருந்து வருகின்றனர். 



உண்மைத் தன்மை என்ன?


இதன் உண்மை தன்மையை கண்டறிய வீடியோவின், குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி Hindustan Times தனது யூடியூப் சேனலில் வைரலாகி வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதில், "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய போது இச்சம்பவம் நடைபெற்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி இந்த நிகழ்வு தொடர்பாக விரிவான செய்தியை ABP ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், "2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன் ஒரு பகுதியாக நேற்று (மே 4, 2019) டெல்லி மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய அரவிந்த் தெஜ்ரிவாலை 33 வயதான சுரேஷ் என்பவர் கெஜ்ரிவால் பயணித்த வாகனத்தின் மீது ஏறி அவரை கன்னத்தில் தாக்கினார். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.


அதே ஆண்டு மே 10ஆம் தேதி Deccan Chronicle வெளியிட்டுள்ள செய்தியின்படி, "முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் தாக்கினேன் என்று தெரியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவரைத் தாக்கிய சுரேஷ் கூறினார்" என்று குறிப்பிட்டுள்ளது.


முடிவு:


தேடலின் முடிவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் தாக்குவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. 


இதையும் படியுங்கள்: Fact Check: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்படும் காணொலி? உண்மை என்ன?


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NEWSMETER என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.