Fact Check: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டதாக, பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 


இணையத்தில் பரவும் வீடியோ:


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ராகுல் காந்தியின் குரல் சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் இந்தியப் பிரதமராகப் பதவியேற்கிறார். டெல்லியில் உள்ள செங்கோட்டையின் காட்சிகள் மற்றும் இசையுடன் கூடிய இந்த வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பகிர்ந்துள்ளனர்.  அந்த பதிவில் "அன்றைய நாள் விரைவில்... ஜூன் 4ஆம் தேதி... பிரதமர் ராகுல் காந்தி..." என குறிப்பிட்டுள்ளனர். ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, இதுபோன்ற பல செய்திகள் இணையத்தில்  பரவி வருகின்றன. 




         இணையத்தில் பரவும் வீடியோ தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்


உண்மைத்தன்மை:


இணையத்தில் வைரலாகும் ராகுல் காந்தி தொடர்பான அந்த வீடியோவை,  BOOM செய்தி நிறுவனம் வீடியோவைப் பதிவிறக்கியது. மேலும் இரண்டு வெவ்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டறியும் கருவிகள் மூலம் அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஜோத்பூர் உருவாக்கிய டீப்ஃபேக் பகுப்பாய்வுக் கருவியான இடிசார் மூலம் ஆடியோ மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி பேசுவது போன்ற ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது உறுதியானது.


அதைதொடர்ந்து மற்றொரு டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை கண்டறியும் கருவியான,  contrails.ai மூலம் ஆடியோ கிளிப் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமே, ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றதை போன்ற ஆடியோ கிளிப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மேலும் உறுதியானது. contrails.ai வழங்கிய அறிக்கை, ஆடியோவை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட நுட்பம் "சத்தமான பின்னணி இசையுடன் மிகவும் மலிவான AI ஆடியோ குளோன்" என்று கூறியது.


தீர்ப்பு:


நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024 ஒட்டி, சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான பல்வேறு போலி செய்திகளின் பரவல் அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பல போலியான வீடியோக்கள், ஆடியோக்கள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில்  காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் குரல் கொண்டும் ஒரு போலி வீடியோ இணையத்தில் வைரலானது. அதே பாணியில் தான், ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. ஆனால், அது உண்மை அல்ல, செயற்கை நுண்னறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாகும்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.