Fact Check: தமிழக அமைச்சர் மஸ்தான்  திமுக தொண்டர் ஒருவரின் வாயில் மதுவை ஊற்றுவது போன்ற புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் புகைப்படம்:


சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் 100 சதவிகிதம் கோதுமையால் தயாரிக்கப்பட்ட பீர் விற்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், திமுக துண்டை தோளில் போட்டு இருந்த ஒருவரது வாயில் மதுவை ஊற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஒருவர், ”கோதுமை பீர், ராகி ரம், வரகு விஸ்கி, கம்பு பிராந்தி எல்லாம் வர வாய்ப்பிருக்கு. இந்தியாவை காப்பாற்ற தளபதியின் தொலைநோக்கு திட்டம்" என குறிப்பிட்டுள்ளார்.



உண்மைத்தன்மை என்ன?


வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய, கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலைமலர் வெளியிட்டிருந்த செய்தியின் படி, புதிதாக கோதுமையால் தயாரிக்கப்பட்ட பீர் மட்டுமே டாஸ்மாக்கில் அறிமுகமாக உள்ளது தெரியவந்தது. மேலும்,  "ஊட்டி விடும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்" என்ற வார்த்தையுடன் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மூதாட்டியின் வாயில் குச்சி ஐஸ் வைத்த செஞ்சி மஸ்தான்.. என்ன இது விளையாட்டு.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு ?" என்ற தலைப்பில் பாலிமர் நியூஸ் தனது யூடியூப் சேனலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.


அந்த காணொலியில் உள்ள தம்நெயில் புகைப்படத்தில் அமைச்சர் ஒரு நபருக்கு குச்சி ஐஸ் கொடுப்பது போன்று உள்ளது. அப்புகைப்படத்தில் இருக்கும் குச்சி ஐஸை நீக்கிவிட்டு மது பாட்டிலை வைத்து தவறாக எடிட் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்ததில் அது எடிட் செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.




               இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


மேலும் படிக்க: அமைச்சர் மஸ்தான் ஒருவருக்கு வாயில் மதுவை ஊற்றுவதாக வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி?


 


தீர்ப்பு:


தேடலின் முடிவாக அமைச்சர் மஸ்தான், திமுக தொண்டர் ஒருவருக்கு வாயில் மதுவை ஊற்றி விடுவது போன்று வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள்: Fact Check: பொள்ளாச்சியில் நான்கு சக்கரங்களில் இயங்கும் பேருந்து? - வைரலாகும் வீடியோ உண்மையா?


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.