தென்காசியில் உள்ள இந்து கோயில் தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தகவலானது உண்மையா அல்லது தவறாக பரப்பப்படுகிறதா என்பது குறித்து ஆராய்ந்தோம்.
இந்து கோயிலாக மாற்றம்?
சமூக வலைதளங்களில் சமீப தினங்களாக இந்து கோயிலானது, இஸ்லாமிய தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று செய்தி பரவி வருகிறது. அந்த சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதாவது, ஒரு வீடியோ காட்சி இருக்கிறது. அதில் கோயிலின் காட்சி பதிவுகள் வீடியோவாக ஒளிபரப்பப்படுகிறது.
இதுகுறித்து, சிலர் அந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது, இது பண்டைய கால இந்து கோயில். இதன் கட்டுமானத்தை பாருங்கள், இந்து கோயிலை போன்றுதான் உள்ளது, இஸ்லாமிய கோயிலின் அமைப்பு போன்று இல்லை. இதிலிருந்தே தெரிகிறதல்லவா, இது இந்து கோயில்தான் என்று. மேலும் சிலர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசுதான் இஸ்லாமிய வழிபாட்டு தலமாக மாற்றியது என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தகவல் குறித்த உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்ததில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தளமானது, இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
திராவிட கட்டடக் கலை:
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பண்டைகால இந்து கோயிலை இஸ்லாமிய தர்காவாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் உண்மையல்ல, பொய்யானது.
அந்த வீடியோ காட்சியில் இருப்பது, தென்காசியில் உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவானது, திராவிட கட்டடக் கலைகளை அடிப்படையாக கொண்டும், முன்னுதாரணமாகவும் கொண்டும் கட்டப்பட்டுள்ளது.
இந்த தர்காவானது, இஸ்லாமிய அறிஞர் முகைதீன் அப்துல் காதீர் ஜிலானி நினைவாக 1678 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தர்காவுக்கு இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் வருகை தருகின்றனர். இந்த தர்காவானது திராவிட கட்டடக் கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளாதால், சிலர் இதை தவறாக புரிந்து பரப்பி வருகின்றனர்.
பரப்ப வேண்டாம்:
ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில் பெரும்பாலும் திராவிட கட்டடக் கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பண்டைகால இந்து கோயிலை இஸ்லாமிய தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பொய்யானது. எனவே இதுபோன்ற பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என தெரிவித்து கொள்கிறோம்.