Fact Check: குடியரசு தலைவரின் நிறத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாக, வைரலான சமூக வலைதள பதிவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


வைரலாகும் சமூக வலைதளப்பதிவு:


பிரதமர் நரேந்திர மோடியை பேசியதாக 15 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ”இந்தியாவில் உள்ள அனைத்து கருமை நிறமுள்ள நபர்களையும் அவர் "ஆப்பிரிக்கர்கள்" என்று குறிப்பிடுவதை போன்றும், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கருநிற தோலை கொண்டிருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பேசுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


அதாவது, “கருமையான சருமம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்கர்கள். திரௌபதி முர்முவும் ஆப்பிரிக்கர், அதனால்தான் அவரைப் போன்ற கருமையான நிறமுள்ளவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என மோடி பேசுவதை போன்ற வீடியோ அடங்கிய சமூக வலைதளப்பதிவு பரவலாகப் பகிரப்படுகிறது. ஆனால் உண்மையில் மோடி அப்படி பேசவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா சொன்ன கருத்தை விமர்சித்த மோடியின் பேச்சை, சிலர் உள்நோக்கத்துடன் எடிட் செய்து தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.




   இணையத்தில் வைரலாகும் வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட் (Source: Facebook/ YouTube/ Modified by Logically Facts)


உண்மைத்தன்மை என்ன?


வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில், 2024 மே 8 அன்று தெலங்கானாவின் வாரங்கலில் நடந்த தேர்தல் பேரணியில், மோடியின் உரையில் இருந்து வைரல் கிளிப் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேரணியில் மோடி ஆற்றிய முழு உரையும் பாரதிய ஜனதா கட்சியின் யூடியூப்பில் நேரலை செய்யப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியையும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சித்த மோடி, காங்கிரஸ் அயலக பிரிவின் முன்னாள் தலைவரான பிட்ரோடாவின் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் குறிப்பிட்டு பேசினார். 


அதன்படி வீடியோவில் 43:51 பகுதியில், "இளவரசரின் மாமா ( ராகுல் காந்தியைக் மறைமுகமாக குறிப்பிட்டு) அமெரிக்காவில் வசிப்பதை இன்று நான் கண்டுபிடித்தேன். இளவரசரின் மாமா அவருக்கு தத்துவஞானியாகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றுகிறார். குழப்பமான மற்றும் சிக்கலான சூழலில் உதவுவதற்கு கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவர் இருப்பதை போன்று, முக்கியமான மற்றும் குழப்பமான சூழலில் இளவரசர் இந்த மூன்றாம் தரப்பினரிடம் ஆலோசனை கேட்கிறார்.  தோல் நிறத்தின் அடிப்படையில், திரௌபதி முர்முவை ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். அதன் காரணமாக அவர் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள்” என மோடி பேசியுள்ளார். (கீழே உள்ள வீடியோவில் மேற்குறிப்பிடப்பட்ட மோடியின் கருத்துக்களை 43:51 முதல் 45:22 வரை கேட்கலாம்.) இதனால் மோடி உரையின் 44:40 முதல் 44:47 மற்றும் 45:12 முதல் 45:22 வரையிலான பகுதிகள் வெட்டி, ஒட்டி தவறான கருத்துடன் பகிரப்படுவது  தெளிவாகிறது. 



பிட்ரோடா பேசியது என்ன?


மே 8 அன்று தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது பிட்ரோடா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அதில்,  “இந்தியாவைப் போல பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும்” என அவர் பாராட்டினார். அதேநேரம், “கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கு மக்கள் அரேபியர்களைப் போலவும் இருக்கிறார்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருப்பார்கள், பரவாயில்லை. நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என பிட்ரோடா பேசிய இனவெற் தொடர்பான் கருத்து என சர்ச்சையானது. அவரது கருத்துக்கு குவிந்த சர்ச்சைகள தொடர்ந்து, பிட்ரோடா காங்கிரஸ் அயலக பிரிவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் . 


தீர்ப்பு


தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் பேசிய மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு எதிராக இனவெறிக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது தவறானது. சாம் பிட்ரோடாவை விமர்சிக்கும் மோடியின் கருத்துக்கள், தவறான முறையில் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதும் உறுதியாகியுள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Logically Facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுதியுள்ளது.