தோல்வி பயம் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் எம்எல்ஏ உடைத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாக்குப்பதிவு மையத்திற்குள் சிலர் நுழைவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தை போட்டு உடைப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்த அந்த 32 வினாடி வீடியோவில் மலையாள செய்தி நிறுவனமான ஏசியாநெட் நியூஸின் லோகோ இடம்பெற்றிருக்கிறது. அதோடு, மே 22ஆம் தேதி நடந்த சம்பவம் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எம்எல்ஏ உடைத்துவிட்டதாக கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.



வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினாரா காங்கிரஸ் எம்எல்ஏ? வைரலாகும் வீடியோ உண்மையானதா?


உண்மை என்ன? இந்த தகவல் பொய்யானது என NewsMeter கண்டறிந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்சார்லா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணா ரெட்டி வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது வீடியோவில் பதிவாகியுள்ளது.


வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்ததில் பல முக்கிய செய்தி இணையதளங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் செய்தி சேனல்களும் இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன.


வாக்குச்சாவடி மையத்தில் விவிபேட் இயந்திரத்தை ஆந்திர எம்எல்ஏ தரையில் போட்டு உடைத்ததார் என்ற தலைப்பில் என்டிடிவி இதை செய்தியாக வெளியிட்டுள்ளது. ஏழு வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய எம்எல்ஏ கைது செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் (ECI)  அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.


சிசிடிவி காட்சிகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி, தரையில் வீசுவதைக் காணலாம். இந்த ஆண்டு, மே மாதம் 13ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் தெலுங்கு செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஏசியாநெட்டின் லோகோ இடம்பெறும் அதே வீடியோ, அவர்களின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. 'காட்சிகள் வைரலானதை அடுத்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கியது' என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


ராமகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் (EC) ஆந்திரப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளின்படி, போலீஸ் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக எம்.எல்.ஏ தெலங்கானாவில் பதுங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் எம்எல்ஏ அடித்து நொறுக்கியதாக வெளியாகியுள்ள செய்தி பொய் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NewsMeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.