Fact Check: ஹரியானாவில் பிரதமர் மோடி காலி நாற்காலிகளுக்கு மத்தியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதாக, வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் வீடியோ:


பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை (18/05/2024) ஹரியானா மாநிலம் அம்பலாவில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மோடி காலி நாற்காலிகளுக்கு முன்னதாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 




         ஹரியானா பொதுக்கூட்டம் என இணையத்தில் பரவும் புகைப்படம்


வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?


ஹரியானாவில் காலி நாற்காலிகளைப் பார்த்து மோடி வீர உரை ஆற்றியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடுதல் பணியை முன்னெடுத்தோம். அதில் @Anti_CAA_23 என்கிற டிவிட்டர் பயனர் தனது பக்கத்தில் “மோடி குப்பை பேச்சை கேட்க மக்கள் தயாராக இல்லை. புனேவில் மோடி கலந்துக்கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டமின்றி கிடந்த காலி சேர்கள்” என்று குறிப்பிட்டு இதே வீடியோவை மே 01, 2024 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் @ASHOK_TN24 என்கிற டிவிட்டர் பயனரும் மே 02, 2024  அன்று அதே வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.


அதனடிப்படையில் தேடியதில் மோடி கலந்துக்கொண்ட புனே பொதுகூட்டத்தின் முழு வீடியோ,  மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 29, 2024 அன்று லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் நீல நிற மேலுடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மோடி அவ்வீடியோவில் பேசுவதை காண முடிந்தது.




   கடந்த மாத இறுதியில் இணையத்தில் வைரலான புகைப்படம்


மேலும் வீடியோவின் 54:20 நேரத்தில் பிரதமர் மோடி பேசும் வார்த்தைகள், வைரலாகும் வீடியோவில் மோடி பேசும் வார்த்தைகளுடன் ஒத்துப்போவதை காண முடிந்தது. அதன்படி, வைரலாகும் வீடியோ சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது. ஆகவே வைரலாகும் வீடியோவிற்கும்,  ஹரியானா பொதுக்கூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.


மேலும் மோடி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் 59ஆவது நிமிடத்தில், அதாவது வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்திற்கு (54:20) பிறகு மோடி பேச்சை அதிக மக்கள் உட்கார்ந்து கேட்பதை காண முடிகின்றது. இதுத்தவிர்த்து வீடியோவின் 6:52, 21:48, 29:40, 39:37 என பல நேரங்களில் பெரும் கூட்டம் இருப்பதை காண முடிகின்றது. இதனடிப்படையில் மோடி பங்கேற்ற கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லை எனும் வாதம் ஏற்புடையதாக இல்லை.



தீர்ப்பு:


தேடலின் முடிவில், ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது,  சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகியுள்ளது. எனவே அந்த வீடியோ ஹரியானாவில் எடுக்கப்பட்டதாக பரவும் தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.