Fact Check: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு இஸ்லாமியர் என்பது போன்று, பரவும் செய்தியின் உண்மைத்தன்மை கீழே அலசி ஆராயப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் செய்தி..!
சமூக ஊடகங்களில் ராஜேஷ் பரத்வாஜ் என்ற ஒருவர், தினசரி நாளிதழ் ஒன்றின் செய்தி துணுக்குடன், மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் 'மும்தாஜ் மசாமா கட்டூன்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த செய்தி துணுக்கின் தலைப்பு 'மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது' என எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு, அதன் உண்மைத்தன்மைய ஆராய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது.
இணையத்தில் பரவும் செய்தி (SOURCE: FACEBOOK)
உண்மை என்ன?
செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கூகுளில் பலமுறை தேடினாலும், மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் 'மும்தாஜ் மசாமா கட்டூன்' என்று கூறுவதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக முன்னுக்குப் பின் முரணான பல தகவல்களை சேகரிக்க இந்த முயற்சி உதவியது. டிசம்பர் 14, 2021 தேதியிட்ட அறிக்கையில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் உட்பட பல பல முக்கிய செய்தி நிறுவனங்களால், கோவாவில் நடந்த பேரணியின் போது, மம்தா பானர்ஜ் பேசியது செய்தியாக வெள்யிடப்பட்டது. அதன்படி "நான் ஒரு பிராமணன், பாஜகவிடம் குணச் சான்றிதழைப் பெற வேண்டிய அவசியமில்லை" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
விசாரணையில் மேலும் தீவிரமாக்கியதில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் மம்தாவின் தேர்தல் பிரமாணப் பத்திரம் கிடைத்தது. அதில் அவரது பெயர் “மம்தா பானர்ஜி” என்றும், அவரது தந்தையின் பெயர் ப்ரோமிலேஷ்வர் பானர்ஜி என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய மம்தா பானர்ஜி, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இந்தத் தொகுதியில் இருந்து தனது வேட்பு மனுவை (படிவம் 2 பி) தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி தேர்தல் பிரமாண பத்திரம் (Source: Election Commission)
தீர்ப்பு:
விசாரணையின் முடிவில், மம்தா பானர்ஜியின் உண்மையான பெயர் "மும்தாஜ் மசாமா கட்டூன்" என்று தெரிவிக்கும் சமூக வலைதள பதிவு பொய் என்பது உறுதியாகியுள்ளது. மம்தா பானர்ஜியின் சொந்த அறிக்கைகள் மற்றும் அவரது உத்தியோகபூர்வ தேர்தல் பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கூற்று அடிப்படையற்றது மற்றும் புனையப்பட்டது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Vishvas News என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.