Fact Check: எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என, அமித் ஷா பேசியதாக கூறப்படும் விடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராயலாம்.


இணையத்தில் பரவும் வீடியோ:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வரும் 7-ஆம் தேதி மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பட்டியலின சமூகம் (எஸ்சிகள்), பழங்குடியினர் (எஸ்டிகள்) சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBCs) இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


பலரும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவில், "நீங்கள் வாக்களிக்கும் முன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சை கேளுங்கள்.  இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அவர் பேசுகிறார், அதனால்தான் அரசியலமைப்பை மாற்ற 400 இடங்கள் கோரப்படுகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.



உண்மை என்ன?


ஆனால், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது கூகுள் சர்ச்சில் ரிவர்ஸ் இமேஜ் ஆப்ஷனில் தேடியது மூலம் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான உண்மையான வீடியோவில், ”தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பிற்கு முரணான இஸ்லமியர்களின் இடஒதுக்கீட்டை அகற்றுவது” பற்றி அமித்ஷா பேசியுள்ளார்.


அந்த வீடியோவில் V6 நியூஸ் லோகோ இருந்ததை கவனித்தோம். அதனடிப்படையில் V6 நியூஸ் தெலுங்கு யூடியூப் சேனலில் வீடியோவைத் தேடினோம். அதன்படி,  ஏப்ரல் 23, 2023 அன்று 'மத்திய அமைச்சர் அமித் ஷா இஸ்லாமிய இட ஒதுக்கீடு குறித்து கருத்து' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ இருப்பது உறுதியானது.  வீடியோவில் 2:38 நிமிடத்தில்,  "பாஜக அரசு அமைந்தால், அரசியலமைப்புக்கு முரணான இஸ்லாமிய இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். தெலுங்கானாவில் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினர் இந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள், அவர்களுக்கும் அதே வாய்ப்பு வழங்கப்படும்” என அமித் ஷா பேசியுள்ளார்.



NDTV ஏப்ரல் 24, 2023 அன்று 'தெலுங்கானாவில் இஸ்லாமிய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அமித் ஷா சபதம்' என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டது. அதன்படி,  ஐதராபாத் அருகே செவெல்லாவில் பேரணியில் அமித் ஷா உரையாற்றும் போது, ​​மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை 'அரசியலமைப்புக்கு எதிரானது' என்று சாடினார். தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு நிறுத்தப்படும் என உறுதியளித்தார்


ஏப்ரல் 24, 2023 அன்று, டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியின்படி,  தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 4 சதவிகித இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஷா உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத அடிப்படையிலான ஒதுக்கீடுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அமித் ஷா கூறியிருந்தார்.


தீர்ப்பு:


பல்வேறு தரவுகளின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என, அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ போலியானது என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி பேசியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.