Fact Check: ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக, சிபிஐ-யின் ஆனி ராஜா பரப்புரையில் ஈடுபட்டதாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் புகைப்படம்:


சிபிஐ கட்சியை சேர்ந்த ஆனி ராஜா, அவரது கணவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ராஜாவுடன், இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, தற்போது ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவருக்காக பரப்புரை செய்து வருவதாக பதிவிட்டுள்ளனர். மற்றொரு பேஸ்புக் பயனாளி வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, இன்று முதல் ரேபரேலியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். வெட்கமே இல்லை, (மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)" என குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு முகநூல் பயனர் இதே பதிவையும், கம்யூனிஸ்ட் கட்சியை கேலி செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனி ராஜா, இன்று முதல் ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார். கம்யூனிசம் இவ்வளவு பரிதாபமான நிலையை அடைந்துவிட்டதா? (மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)" என குறிப்பிட்டுள்ளார்.




          இணையத்தில் பரவும் புகைப்படம்


உண்மைத்தன்மை என்ன?


இதுதொடர்பாக ஆனி ராஜாவை நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியபோது, தான் ராகுல் காந்திக்காக வாக்கு சேகரிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், சித்தாந்த ரீதியிலான கேள்விகளுக்கு தீர்வு காண முடியாதவர்கள் தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள் என்றார். இது எந்த அடிப்படையும் இல்லாத பரப்புரை,  இது அர்த்தமற்றது.  அவர்கள் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏழ்மையானவர்கள் என்பதற்கு இது சான்று என கூறிய ஆனி ராஜா,  குறிப்பிட்ட தேதிகளில் தான் ரேபரேலியில் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனது போர்டிங் பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டார்.


தொடர்ந்து ஆனி ராஜா, ராகுல் காந்திக்காக பரப்புரை செய்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக தேடியதில் எந்தப் பலனும் இல்லை. அதேநேரம், ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அவரை ஆனி ராஜா விமர்சித்ததாக பல ஊடக செய்திகள் எங்களுக்கு கிடைத்தது. 


மே 6, 2024 அன்று 'வயநாட்டின் வாக்காளர்களுக்கு அநீதி: ராகுல் காந்தியின் ரேபரேலி வேட்புமனு தாக்கலை சாடிய CPI இன் அன்னி ராஜா' என்ற தலைப்பில் எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை எங்களுக்கு கிடைத்தது. அதில் ஆனி ராஜா கூறியதை மேற்கோள் காட்டி, ”உத்திரபிரதேசத்தின் ரேபரேலியில், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தது  வயநாட்டு வாக்காளர்களுக்கு அநீதி இழைத்ததற்கு சமம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


'ரேபரேலி விவாதங்கள் மிகவும் முன்னதாகவே தொடங்கின, கேரளாவில் வாக்குப்பதிவு முடியும் வரை அவர் அதை மறைத்துவிட்டார்: ராகுலின் வயநாடு போட்டியாளர் ஆனி ராஜா' என்ற தலைப்பில் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியையும் நாங்கள் கண்டோம்.


ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு எதிரான ஆனி ராஜாவின் நிலைப்பாட்டை அந்த செய்திகள் மேற்கோள் காட்டுகின்றன. அதில், "ராகுலின் ரேபரேலியில் போட்டியிடுவதற்கான முடிவு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாலும், அதற்கான விவாதங்கள் மிகவும் முன்னதாகவே தொடங்கிவிட்டன. வயநாடு தேர்தல் முடியும் வரை அந்த முடிவை மறைத்து, தொகுதி மக்களுக்கு ராகுல் அநீதி இழைத்து விட்டார்” என ஆனி ராஜா சாடியுள்ளார்.


தீர்ப்பு:


பல்வேறு தேடல்களின் முடிவில், ஆனி ராஜா ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பரப்புரை மேற்கொண்டார் என பரவும் செய்தி போலியானது என்பது உறுதியாகியுள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுததியுள்ளது.