Fact Check: மதரீதியிலான மோதலால் பசு காயமடைந்து ரத்தம் தோய்ந்து காணப்படுவதாக வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வைரல் பதிவு:
ஒரு பசு காயங்களுடன் காணப்படும் புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த பதிவில், பசுவின் மீது காணப்படும் காயங்கள் கோட்டாவின் கைதுன் காவல் நிலையப் பகுதிக்கு அருகிலுள்ள சரண்சௌகியில், ஒரு சட்டவிரோத ஆலயத்தில் இஸ்லாம் ஜிஹாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வைரலாகும் தவறான பதிவு
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது அந்தக் கூற்று தவறானது என்பது கண்டறியப்பட்டது. கோட்டா கிராமப்புற காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்தப் பசு முஸ்லிம்களின் தாக்குதலால் காயமடையவில்லை. வயல்களில் அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலியில் சிக்கி ஆழமான வெட்டுக்களை பெற்றுள்ளது. அதன்படி, பசு தொடர்பான அந்த தகவல் தவறான கூற்றுடன் வகுப்புவாத நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது அம்பலமாகியுள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
மார்ச் 3 அன்று, காயமடைந்த பசுவின் படத்தைக் கொண்ட ஒரு சமூக ஊடகப் பதிவை ஒரு X பயனர் பகிர்ந்தார். அதில் இஸ்லாம் 'ஜிஹாதிகளால்' நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலின் விளைவாக, அந்த விலங்குக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, "கைதுன் காவல் நிலையப் பகுதியில் உள்ள சரண்சௌகியில் ஒரு சட்டவிரோத வழிபாட்டுத் தலத்தில் அமர்ந்திருக்கும் ஜிஹாதிகள், கூர்மையான பொருளால் ஒரு பசுவைத் தாக்கினர். சட்டவிரோத வழிபாட்டுத் தலத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததால், ஜிஹாதிகளின் மன உறுதி அதிகரித்து வருகிறது" என்று அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை வெளியிட்ட வீடியோ
உண்மை சரிபார்ப்பு:
மேலே உள்ள படத்தை கூகிள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்தபோது, இதே போன்ற கூற்றுகளுடன் அதே பதிவை சமூக வலைதளங்களில் பலர் பகிருந்து இருந்ததை காண முடிந்தது. அந்த பதிகளின் கமெண்ட்டுகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, கோட்டா கிராமப்புற காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ X தளத்தில் இருந்து இந்த சம்பவம் குறித்து ஒரு தகவல் கிடைத்தது. அதில் வயல்களுக்கு வேலி அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பிகள் காரணமாக பசு காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலு, "யாரும் வேண்டுமென்றே பசுவை காயப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்றும் விளக்கமளித்தது. அதோடு பசுவிற்கு காயம் ஏற்படுத்திய கம்பி வேலிகளையும் போலீசார் தங்களது வீடியோவில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
கூடுதலாக, சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த தகவல்களின்படி கோட்டா கிராமப்புற காவல்துறை DYSP ராஜேஷ் டாக்காவைத் தொடர்பு கொண்டோம். அவர் வயல்களுக்கு வேலி அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பிகளால் பசு காயமடைந்ததை உறுதிப்படுத்தினார். பசுவிற்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர் கூட கம்பி போன்ற வெட்டுக்களால் ஏற்பட்ட காயங்கள் என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார். அதனடிப்படையில் கம்பி வேலியால் தான் பசு காயமடைந்ததும், சமூக ஊடகங்களில் வகுப்புவாத நோக்கத்துடன் ஒரு தவறான பதிவு பகிரப்பட்டதும் உறுதியானது
குற்றச்சாட்டு: ராஜஸ்தானின் கோட்டாவில் இஸ்லாமிய ஜிஹாதிகளால் ஒரு பசு கொடூரமாக தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
உண்மை: கோட்டா கிராமப்புற காவல்துறையினரின் தகவல்களின்படி, வயல்களில் அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலிகளால் பசுவுக்கு காயம் ஏற்பட்டது. உள்நோக்கத்துடன் யாரும் அதை தாக்கவில்லை.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக PTI News என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.