Fact Check: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாக, பரவும் செய்தியின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பரவும் செய்தி என்ன?


பாஜக தமிழக தலவர் அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று,  பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ”அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது. சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கண்டிப்பாக ஏதோ ஒன்று குறித்து பேசிய வீடியோ ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், இந்த நியூஸ்கார்ட் தற்போது வைரலாகிறது. இதையடுத்து, அந்த தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




    இணையத்தில் வைரலாகும் நியூஸ் கார்ட்


உண்மைத் தன்மை என்ன?


அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தபோது, கடந்த ஏப்ரல் 13, 2024 அன்று அவர்கள் வெளியிட்டிருந்த நியூஸ்கார்ட்,  தற்போது வைரலாகும் நியூஸ்கார்ட் உடன் ஒத்துப்போனது.



தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக பரவும் வீடியோ



ஆனால் அந்த கார்டில் “ராகுகாலம் பார்க்காமல் எந்த ஒரு திமுக வேட்பாளராவது வேட்பு மனு தாக்கல் செய்தது உண்டா? இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்? தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்” என்கிற செய்தியே இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடிட் செய்தே தற்போதைய வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது உறுதியானது.




     உண்மையான மற்றும் போலியான நியூஸ் கார்டின் ஒப்பீடு


மேலும், இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று விளக்கமளித்தார். குறிப்பிட்ட நியூஸ்கார்டினை போலி என்று குறியிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.


அமித் ஷா உடனான உரையாடல் தொடர்பாக, தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  அண்ணாமலை பற்றி தமிழிசை பேசியதாக பரவும் நியூஸ் கார்ட் போலி


முடிவு:


அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.