Fact Check: AIMIM கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.,யுமான  அசாதுதின் ஓவைசி,  ராமர் படத்தை பரிசாக பெறுவதை போன்ற புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கபட்டுள்ளது.


இணையத்தில் பரவும் புகைப்படம்:


இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், AIMIM தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி ராமர் உருவப்படத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள ஒருவர், தேர்தலில் தோல்வி பயத்தில் ஓவைசி தன்னை ராம பக்தன் என்று கூறிக்கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.


அதே புகைப்படம் பேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகிறது.  ஐதராபாத் மக்களவை தொகுதியில் ஒவைசி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த மே 13ம் தேதி தேர்தல் நடந்தது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள சூழலில், கையில் ராமர் புகைப்படம் இருப்பதை போன்ற ஓவைசியின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.




      இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


உண்மைத்தன்மை என்ன?


வைரலான புகைப்படம் தொடர்பாக கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, ஒவைசி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 7, 2018 அன்று பகிர்ந்த புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது. அந்த பதிவில் உள்ள புகைப்படத்தில், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவப்படம் பொருந்திய பரிசை ஓவைசி பெறுவதாக உள்ளது.


மேலும், "மோச்சி காலனியைச் சேர்ந்த தலித்துகள் AIMIM தலைவர் பாரிஸ்டர் அசாதுதீன் ஓவைசியை தார் எஸ் சலாமில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்து, தங்கள் பகுதியின் (பஹதூர் புரா தொகுதியில் உள்ள ரன்னூஸ் புரா) வளர்ச்சிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




        இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


2018 இன் புகைப்படத்திற்கும் வைரல் புகைப்படத்திற்கும் இடையிலான ஒப்பீடு கீழே உள்ளது.  இந்த வைரலான புகைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்தால் ராமர் உருவப்படத்தின் வலது மூலை சேதமடைந்துள்ளது. மேலும் இந்த மூலையை வைத்திருக்கும் கை சரியாக தெரியவில்லை.


மேலும், வைரல் படத்தில் உள்ள படத்தின் மூலைகள் சரியாக இல்லை. இவை அனைத்தும் வைரலாகி வருவது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதைக் குறிக்கிறது. மேலும், இந்த கூட்டத்தில் ராமர் உருவப்படத்தை வைத்திருக்கும் ஒவைசியின் புகைப்படம் எதுவும் இந்த தேதியில் கிடைக்கவில்லை. 



தீர்ப்பு:


எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை  சிலர் பகிர்ந்துள்ளதோடு, ராமரின் படத்தை ஓவைசி வைத்திருப்பதாகவும் பேசி வருகின்றனர். ஆனால், உண்மையில் அம்பேத்கரின் உருவப்படம் இருந்த இடத்தில், சிலர் உள்நோக்கத்துடன் ராமரின் புகைப்படத்தை எடிட்டிங் மூலம் பொருத்தி இருப்பதை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. ஓவைசி இந்து மத வழிபாடுகளில்  ஈடுபட்டதாகவும் , கோவிலுக்குச் சென்றதாகவும் வெளியான பொய்யான கூற்றுகளை நாம் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logically facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுததியுள்ளது.