பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்று வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ்கார்ட் உண்மையா? இல்லையா? என தெரிந்து கொள்வோம்.


நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என பாஜக தலைவர் எச். ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) நேற்றைய தேதியிட்ட (மார்ச் 24) புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் வைரலாகி வருகிறது. மேலும் அதில், தன் மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச். ராஜாவுக்கு இருக்கும் கோபத்தை நாடார் சமூகத்தின் மீது காட்டுவது தவறு என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடார் சாதியினர் குறித்து எச். ராஜா பேசிய சர்ச்சை கருத்து.. கண்டனம் தெரிவித்தாரா பொன்னார்?


Fact-check:


நாம் மேற்கொண்ட ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்று தெரியவந்தது. முதலில், ஹெச்.ராஜா நாடார் சமூகத்தினரை தமிழர்கள் அல்ல என்று கூறினாரா என்பது குறித்து தேடினோம். அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இதுதொடர்பாக தினமலர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக வலைதளங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர்” என்று ஹெச். ராஜா தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை ஃபேக்ட்செக் செய்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு கண்டனம் தெரிவித்தாரா என்பது குறித்து கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்ததில், அவர் கண்டனம் தெரிவித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவரது சமூக வலைதள பக்கங்களில் ஆய்வு செய்த போதும் அவர் ஹெச். ராஜா குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.






மேலும், நேற்றைய தேதியில் புதிய தலைமுறை ஊடகம் இவ்வாறான நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் ஆய்வு செய்தபோது, அதிலும் வைரலாகும் நியூஸ் கார்டை போன்ற எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து, புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ் கார்ட் உண்மைதானா என்று கேட்டறிந்தோம். அதற்கு, “இது போலி என்று விளக்கம் அளித்தனர்” அதேசமயம் நியூஸ் கார்ட் போலி என்று மறுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


Conclusion:


முடிவாக நம் தேடலில் நாடார் சமுதாயம் குறித்து தவறாகப் பேசிய பாஜக தலைவர் ஹெச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்று வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.