Fact Check: ஜெகன்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட உள்ளதாக, பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் பரவும் புகைப்படம்:


பிரதமர் மோடி கடந்த 20 ஆம் தேதி ஒடிசாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, “பூரி ஜெகன்நாதர் கோயில் கருவூல அறையின் சாவி தமிழ்நாடு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.


இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கும் நிலையில்,“மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகன்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


அதனை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய ஆய்வு மேற்கொண்டோம்.




             இணையத்தில் பரவும் நியூஸ்கார்ட்


தகவலின் உண்மைத்தன்மை என்ன?


இணையத்தில் வைரலான நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால்,  அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். ஆனால், அந்நிறுவனத்தின் சமூக வலைதள கணக்குகளில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 28, 2024 அன்று, அண்ணாமலை அப்படி பேசியதாக எந்தவொரு நியூஸ்கார்டும் பகிரப்படவில்லை.


தொடர்ந்து தேடுகையில் “தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி” என்று அண்ணாமலை பேசியதாக ஜனவரி 10, 2024 அன்று தினமலர் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே, மோடியின் தியானம் பற்றி அண்ணாமலை பேசியதாக போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.




  உண்மையான மற்றும் போலியான நியூஸ் கார்ட் ஒப்பீடு 


இதனைத் தொடர்ந்து தினமலரின் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.


தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக் கொண்டு பேசுகையில், “இத்தகவல் தவறானது, அண்ணாமலை இவ்வாறு பேசவே இல்லை” என்று அவர் பதிலளித்தார்.


தீர்ப்பு:


தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகன்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று,  அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது. எனவே,  வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.






பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.