மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பொய்யான செய்திகளும் போலி வீடியோக்களும் போலி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொய்யான செய்திகளை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு செய்தி நிறுவனத்தின் கடமை.


அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும் உத்தர பிரதேச முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தீயாய் பரவும் உ.பி. முதலமைச்சரின் புகைப்படம்:


ஒரு வேளை.. எங்களது அரசு, வீழ்ந்து விட்டால் ..!.. நாடு முழுவதையும் ".தீ." இட்டு கொளுத்தி விடுவேன்..." என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கான்பூரில் பேசியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இந்தி மொழியில் ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டதாக புகைப்படம் இடம் பெற்றுள்ளது.




இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இவ்வாறாக யோகி ஆதித்யாநாத் பேசினாரா என்று கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவர் அவ்வாறாக பேசியதாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.


தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் "எம் நியூஸ்" என்ற லோகோ இடம் பெற்றுள்ளது. அது Mantavya News என்ற குஜராத்தி மொழியில் இயங்கக்கூடிய செய்தி சேனல் என்பது தெரியவந்தது. குஜராத்தி மொழி செய்தி சேனல் எவ்வாறு இந்தி மொழியில் செய்தி வெளியிடும். இதன் மூலம் இது போலி என்பது முதற்கட்டமாக தெரியவந்தது.


யோகி ஆதித்யநாத் பேசியது என்ன?


தொடர்ந்து, வைரலாகும் செய்தியில் உள்ள வடிவமைப்பை தற்போது அதே ஊடகத்தில் வெளியாகும் பிரேக்கிங் நியூஸ் வடிவமைப்புடன் ஒப்பிட்டு பார்த்தோம். அப்போது, இரண்டிற்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை ஃபோட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்ததில் அது எடிட் செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.


நம் தேடலின் முடிவாக எங்களது அரசு வீழ்ந்து விட்டால் இந்த நாட்டையே தீயிட்டு கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அது எடிட் செய்யப்பட்டது என்றும் கூற முடிகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.