“கார்கே கூறுவதை கேளுங்கள்… உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம். இந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.


கார்கே சொன்னதாக பரப்பப்படும் தகவல் உண்மையா?


இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரவும் வீடியோவில், “காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? காங்கிரஸ் உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து, அதில் இருக்கும் பணத்தை எடுத்து, மற்றவர்களுக்கு தரப்போகின்றார்கள், முஸ்லீம்களுக்கு தரப்போகின்றார்கள். அவர்களுக்கு அதிக பிள்ளைகள் உள்ளதால் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்…. சகோதரா உங்களுக்கு பிள்ளை இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கார்கே பேசுவதாக இருந்தது.




எனவே  இவ்வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மையை அறிய இவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்.


இத்தேடலில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், “LIVE: Congress President Shri Mallikarjun Kharge addresses the public in Ahmedabad, Gujarat” என்று தலைப்பிட்டு கார்கே பேசிய உரையின் முழுப்பகுதி வீடியோவாக பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.


அந்த உரையை முழுமையாக கண்டப்பின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கார்கே பேசியதில் முன்பகுதியையும், பின்பகுதியையும் நீக்கி தவறான இக்கருத்து பரப்பப்படுகின்றது என அறிய  முடிந்தது.


ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்த அவ்வீடியோவில் 31:50 நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கார்கே பேசி இருந்ததை காண முடிந்தது.


உண்மையில் அவர் பேசியது என்ன?


“சாதிவாரி கணக்கெடுப்பை செய்வோம் என்று நாங்கள் கூறி இருந்தோம். எந்த இடத்தில், எந்த சாதியினர்... எவ்வளவு படித்தவர்கள் இருக்கின்றார்கள், எவ்வளவு பட்டதாரிகள் இருக்கின்றனர், எவ்வளவு வருமானம், எவ்வளவு தனி நபர் வருமானம் இருக்கின்றது... இதையெல்லாம் அறிந்துதுக்கொள்ள நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை செய்யப்போகின்றோம்.

ஆனால் மோடி என்ன கூறுகின்றார்... காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? காங்கிரஸ் உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து, அதில் இருக்கும் பணத்தை எடுத்து, மற்றவர்களுக்கு தரப்போகின்றார்கள், முஸ்லீம்களுக்கு தரப்போகின்றார்கள்.  அவர்களுக்கு அதிக பிள்ளைகள் உள்ளதால் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்....

சகோதரா உங்களுக்கு பிள்ளை இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?...

ஆனால் நாங்கள் விநியோகம் செய்பவர்கள் இல்லை. அதுபோல யாருக்கும் நாங்கள் எடுத்துக் கொடுக்கப்போவதில்லை. மன்னித்துகொள்ளுங்கள்!  மோடி அவர்களே நீங்கள் பரப்பும் இந்த எண்ணங்கள் தவறானது. இந்த எண்ணங்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், எங்களுக்கும் தீங்கானது” என கார்கே பேசியுள்ளார்.




இந்துக்களின் அலமாரியை உடைத்து அதிலிருக்கும் பணத்தை முஸ்லீம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.


உண்மையில் மோடி இவ்வாறு பேசி வருகின்றார் என்றே கார்கே பேசியுள்ளார். அவர் பேசியதில் முன்பகுதியையும், பின்பகுதியையும் நீக்கி தவறான இக்கருத்து பரப்பப்பட்டு வருகின்றது.


இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.