பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாவர்க்கரை ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


அண்ணாமலை பேசியது என்ன? சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.




சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக வைரலாகும் வீடியோவில், “தமிழகத்தில் பொதுவாக என்ன சொல்லுகின்றார்கள் என்றால் பிரிட்டிஷ் பூட் லிக்கர் அப்படி என்பார்கள். ஆங்கிலேயரின் பூட்டை நக்கிய வீர் சாவர்க்கர் அப்படினு பொதுவாக பேசுவார்கள்” என்று அண்ணாமலை பேசுவதை காண முடிகின்றது.


அண்ணாமலை இவ்வாறு பேசுவதற்கான பின்னணியை அறிய உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இவ்வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம்.


இத்தேடலில்  இன்சைட் தமிழ் எனும் யூடியூப் பக்கத்தில் “Thiru. Annamalai l Press Meet l BJP l Savarkar Book Published” என்று தலைப்பிட்டு அண்ணாமலை பேசிய இவ்வீடியோவின் முழுப்பகுதி அக்டோபர் 02, 2021 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.




 இவ்வீடியோவின் 6:28 நேரத்தில் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,  “தமிழகத்தில்  வீர் சாவர்க்கர் குறித்த பேச்சு வரும்போது உடனடியாக ஒரு தாக்குதல் நடக்கும். அவர் ஒரு மன்னிப்பு கேட்டவர்.. அதுவும் தமிழ்நாடை பொறுத்தவரைக்கும் என்ன சொல்லுவார்கள் என்றால்… இந்த வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை.. இருந்தாலும் தமிழகத்தில் பொதுவாக என்ன சொல்லுகின்றார்கள் என்றால் பிரிட்டிஷ் பூட் லிக்கர் அப்படி என்பார்கள். ஆங்கிலேயரின் பூட்டை நக்கிய வீர் சாவர்க்கர் அப்படினு பொதுவாக பேசுவார்கள்… ஆனால் உண்மையிலேயே அம்மனிதனுக்கு இது நியாயம் செய்யுதா?…..” என அண்ணாமலை சாவர்க்கருக்கு ஆதரவாக பேசி இருப்பதை காண முடிந்தது.


இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை பேசியதில் முற்பகுதியையும் பிற்பகுதியையும் நீக்கி வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என நமக்கு தெளிவாகின்றது.


அண்ணாமலையின் இந்த பத்திரிக்கை சந்திப்பானது விக்ரம் சம்பத் என்பவர்  சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டிருந்ததை தொடர்ந்தது ஏற்பாடு செய்யப்பட்டதாகும். ஏறக்குறைய 25 நிமிடம் நடந்த இச்சந்திப்பில் சாவர்க்கர் குற்றமற்றவர் என்றும், அவர் செய்தது எதுவும் தவறில்லை என்றும் அண்ணாமலை தொடர்ந்து வாதிட்டிருப்பதை காண முடிந்தது.


 



சிலர் அண்ணாமலை பாஜகவில் இணைவதற்கு முன் சாவர்க்கர் குறித்து இழிவாக பேசியதாக கூறி இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர். உண்மையில் அண்ணாமலை பாஜகவில் ஆகஸ்ட் 25, 2020 அன்று இணைந்துள்ளார்.


ஆனால் இந்த புத்தக வெளியீட்டு விழாவோ செப்டம்பர் 30, 2021 அன்று, அதாவது அண்ணாமலை பாஜகவில் இணைந்து ஒரு வருடம் கழித்தே நடந்துள்ளது.


இதன்படி பார்க்கையில் அண்ணாமலை பாஜகவில் இணைவதற்கு முன் சாவர்க்கர் குறித்து இழிவாக பேசியதாக பரப்பப்படும் கருத்தும் தவறானதாகும்.


உண்மை என்ன? சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.  அண்ணாமலை சாவர்க்கருக்கு ஆதரவாக பேசிய வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் வைத்து இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.


இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.