“கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து அரசு தரப்பிலோ அல்லது பொது ஊடகங்களிலோ இதுக்குறித்து செய்தி வந்துள்ளதா என தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அரசோ, ஊடகமோ வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் பொய்யானது என்று தெரிவித்தார்.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிபிட்டுள்ள ஜூன் 11, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
தொடர்ந்து தேடியதில், “”கச்சத்தீவு – புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது”,”கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”” என்று பிரதமர் மோடி பேசியதாக ஏப்ரல் 01, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newchecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.