பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு மத்தியில், சமூக வலைதளங்களில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


பாஜகவுக்கு வாக்களிக்க சொன்னாரா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி?


அந்த வீடியோவில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது" என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்ட சமூக வலைதளவாசிகள் சிலர், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்கிறார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி" என கூறி வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "மேற்குவங்கத்தில் இந்தியா கூட்டணி அமையாமல் போனதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரியே காரணம்" எனக் கூறி கடுமையாக விமர்சித்தார்.


இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை மேற்குவங்க பாஜகவின் கண்கள் மற்றும் காதுகள் என்று ஏன் சொல்கிறோம்? சாரதா ஊழல் வழக்கில் அவரது பெயர் அடிபட்டாலும், மத்திய விசாரணை அமைப்புகளால் அவருக்கு ஒருபோதும் சம்மன் அனுப்பப்படவில்லை.


வைரலானது எடிட் செய்யப்பட்ட வீடியோவா? 


மேற்குவங்கத்திற்கு சேர வேண்டிய நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு அநியாயமாக நிறுத்தியதற்கு எதிராக அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பஹரம்பூர் வந்த போது, ​​​​உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரை விமர்சிக்கவில்லை" என்றார். 


இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். வைரலாகும் அந்த வீடியோவில் ஜங்கிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முர்தாசா உசேனுக்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரச்சாரம் செய்வது தெரிகிறது.


மேலும், ஆராய்ந்ததில் வைரலாகும் வீடியோவின் முழு நீள வீடியோ நமக்கு கிடைத்தது. மேற்குவங்க காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அந்த வீடியோ வெளியிடப்பட்டது தெரியவந்தது.


அந்த வீடியோவின் 25ஆவது நிமிடம் 9ஆவது நொடியில் இருந்து கேளுங்கள். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பின்வருமாறு பேசுகிறார், "மோடிக்கு முன்பு போல் நம்பிக்கை இல்லை. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஏற்கனவே 100 இடங்கள் மோடியின் கையிலிருந்து நழுவிவிட்டன. அது தொடர்ந்து குறைந்து வருகிறது.


காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும். அவர்கள் வெற்றி பெறாவிட்டால், இந்தியாவில் மதச்சார்பின்மை ஒழிந்துவிடும். திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது சிறந்தது. எனவே, திரிணாமுலும் வேண்டாம் பாஜகவும் வேண்டாம். காங்கிரஸ் வேட்பாளர் பாகுலுக்கு (முர்தாசா ஹொசைன்) மட்டும் வாக்களியுங்கள். அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார்" என்றார்.


 






இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருக்கிறது. 


உண்மைதான் என்ன?


இதன் மூலம், வைரலானது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பது தெரிய வருகிறது. பாஜகவுக்கு வாக்களிக்கும்படி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொல்லவில்லை.

 


 

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NEWSCHECKER என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.