அப்பா லாரி டிரைவராகவும், அம்மா கூலித்தொழிலாளியாக இருந்தப்போதும், தன்னுடைய லட்சியத்தை அடைய விடா முயற்சியுடன் போராடினேன். அதன் பலன் தான் தற்போது செம்பருத்தி சீரியல் அருணாக மக்களிடம் பிரபலமடைந்துள்ளேன் என்கிறார்  விஜே கதிர்.


சினிமாக்களில் வலம் வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் நடிப்பவர்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் ஃபேமசான சீரியல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, மக்களே அவர்களை உச்சத்தை எட்டும் அளவிற்கு ரசிகர்களை சேர்த்து விடுவார்கள் என்று தான் கூறவேண்டும். ஒவ்வொரு சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனை யாரும் நம்பவில்லை என்றால் சற்று அவர்களின் சோசியல் மீடியாவில் உள்ள பாலோவர்களையே சாட்சிகளாக எடுத்துக்கொள்ளலாம்.



அந்தளவிற்கு மக்கள் சின்னத்திரையில் மூழ்கிவிட்டனர். இன்றைய சூழலில் மக்கள் அதிகளவில் பார்க்கும் சீரியல் அனைத்தும் விஜய் மற்றும் ஜீ சேனலில் வரக்கூடியவையாக உள்ளது. இதில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும்,  கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அதே விறுவிறுப்போடு கதைக்களத்தை நகர்த்தி வரும் ஒரு சீரியல் தான் செம்பருத்தி. மற்ற சீரியல்களைப்போல் இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தோடு வலம் வரும் இந்த சீரியலில் பிரியாராமன் அகிலாண்டேஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதோடு  ஷாபனா, விஜே அக்னி, விஜே கதிர், லக்சுமி போன்றவர்களும் நடித்துவருகிறார்கள். ஜீ தமிழின் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்துவருகிறது.  அகிலாண்டேஸ்வரி மீண்டு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில்தான், இந்தத் தொடரில் நாயகன் ஆதியின் தம்பியாக வலம் வரும் கதிர், இந்த சீரியலில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் எப்போதும் ஜாலியாக வலம் வரும் இவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்பட்டு முன்னேறியதாகவும், தன்னுடைய குடும்பம் தான் பெரிய இன்ஸ்பரேசன் என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் தன்னுடைய அப்பா லாரி டிரைவர் எனவும், அம்மா கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபடுவார் என தெரிவித்த அவர் மிகுந்த கஷ்டத்தோடு தனது பட்டப்படிப்பை முடித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்தே ஊர் திருவிழாக்களில் நடைபெறும் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடுவதோடு, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வழங்குவேன். என்னுடைய இந்த திறமையினால் லோக்கல் சேனலில் தனக்கு ஆங்கரிங் வேலை கிடைத்தாகக் கூறியுள்ளார்.



இப்படி படிப்படியாக தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வந்த கதிருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தியதால் ஒரு நடிகனாக மக்கள் மத்தியில் நிற்க முடிந்ததோடு,நல்ல புகழ் தனக்கு கிடைத்தது என பெருமையுடன் கூறியுள்ளார்.  மேலும் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் போதே, ஜீ தொலைக்காட்சியில் ஜில் ஜங் ஜக் என்ற ஷோவில் தொகுப்பாளராக ஒன்றரை ஆண்டு பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.


தன்னுடைய குடும்பம் கொடுத்த ஆதரவும், தன்னுடைய நம்பிக்கையும்தான் இந்தளவிற்கு வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருந்தது என  பெருமையுடன் கூறியுள்ள அவர், நான் இவ்வளவு தூரம் வர தன்னுடைய குடும்பத்தான் காரணம் எனவும், என்னுடைய இன்ஸ்பிரேஷனும் அவர்கள் தான் எனக்கூறியுள்ளார். மேலும் சின்னத்திரையில் கிடைத்த நல்ல பெயர்தான் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. மறுபடியும் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் வெள்ளித்திரையிலும் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.





வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், இளம் வயதில் வறுமையை சந்தித்தாலும், தன்னுடைய இலக்கை அடைய விடா முயற்சியுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் விஜே கதிர். இவரின் இந்த திறமைக்கு பலரும் சோஷியல் மீடியாக்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.