‛பேரில்லாத மரம் போல் என்னை... நீ பூமியில் நட்டாயே...’ என்கிற நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு , யுவன் தந்த உயர் தான், ‛ஆராரிராரோ... நான் இங்கு பாடா...’ என்கிற பாடல். ராம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல், கொண்டாடப்பட்டது, விருதுகளை அள்ளியது. அம்மாவின் அன்பிற்கும், அருமைக்கும் பெருமை சேர்க்கும் பாடல் அது. அந்த வகையில் இன்று வரை அந்த பாடலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யுவனின் பெஸ்ட் ப்ளே லிஸ்டில், அந்த பாடல் எப்போதும் இருக்கும். சரி... அதற்கும் அன்னபூரணிக்கும் என்ன சம்மந்தம்? இது தான் இந்த செய்தியே...




அகிலத்தை ஆளும் அன்னபூரணி தாய், தான் என பகிரங்கமாக அறிவித்து, பஜனை இல்லாத பக்தி சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் அன்னபூரணி அரசு அம்மா. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலூன்ற நினைத்து, செங்கல்பட்டில் செடியாக மலர நினைத்தவரை, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விரட்டி விரட்டி மீம்ஸ் போட்டு, ஒருவழியாக்கியது, சமூக வலைதளம். எதற்கும் சலிக்காமல், ‛வந்தா... அம்மாவா தாண்டா வருவேன்....’ என , கடைசிவரை தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஒரு வழியாக திருவண்ணாமலையில், குறிப்பிட்ட சிலருக்கு குருவாக அமர்ந்துவிட்டார் அன்னபூரணி .


வைபிரேஷன் அருளும், மோட்டிவேஷன் புரளும் தீக்சையுடன், தினந்தோறும், ‛அம்மா டிப்ஸ்’களை அள்ளித்தந்து கொண்டிருக்கிறார் அன்னபூரணி. சுட்டெரிக்கும் பொட்டைக்காட்டில், அதே மேக்கெப் குறையாமல், மலர் தூவிய பாதையில், அருள் புரியும் கைகளோடு அதே கேட்வாக், கொஞ்சமும் குறையாமல் , பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணி, தானுண்டு, தான் வேலை உண்டு என ஒதுங்கி நிற்கிறார் . ஆனாலும், அவரை யாராவது ஒருவர் சீண்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். 




தினந்தோறும் பக்தர்களுக்கு தனது அருளாசியை வார்த்தைகளாக பேஸ்புக்கில் பதிவு செய்வது, அன்னபூரணியின் வழக்கம். அந்த பதிவில், பக்தர்கள் சிலர் மெய்மருகி பதிலுரைப்பதும் வழக்கம். அந்த வகையில், உணர்வு தளத்தில் நுழைவு எப்படி என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அன்னபூரணி ஒரு பதினை இன்று பதிவு செய்துள்ளார். வழக்கம் போல், தாயே சரணம், தாயே நீயே என்பது மாதிரியான பதில் பதிவுகள் அதில் இடம் பெற்றிருக்க, ஒரே ஒரு இலங்கை பக்தர் மட்டும், ஒருபடி மேலே போய், 



‛‛அம்மா யுவன்சங்கர் ராஜா இசையில் ஒர் பாடலை ரிலிஸ் செய்யவும். இப்படிக்கு உங்கள் பக்தன் from sri Lanka’’ என்று பதிலளித்துள்ளார். வேறொன்றும் இல்லை... ‛ஆராரிராரோ... நான் இங்கு பாடா...’ பாடல் இருக்கிறது அல்லவா... அதே ஃபார்மெட்டில் ஒரு பாடல் கேட்கிறார். கேட்க கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கும்; ஆனால், அவர்களுக்கு அம்மாவை(அன்னபூரணியை) கொண்டாட ஆசை இருக்காதா... அதற்கு ஒரு நல்ல தீம் இருந்தால் தானே நன்றாக இருக்கும். அதனால், யுவன் உதவியை நாட ஐடியா கொடுத்திருக்கிறார் இலங்கை பக்தர். 




பக்தர்களின் கோரிக்கைக்கு எப்போதும் செவி சாய்க்கும் அன்னபூரணி, இந்த முறை இலங்கை பக்தரின் கோரிக்கையை ஏற்று, யுவன் இசையில் விரைவில் ‛அன்னபூரணி அரசு அம்மா’ பாடல் வர வாய்ப்பிருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.