தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவருக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். யுவன்ஷங்கர்ராஜா இசையில் தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன், தனுஷின் நானே வருவேன், சந்தானத்தின் ஏஜண்ட் கண்ணாயிரம், விஷாலின் லத்தி மற்றும் இயக்குனர் ராமின் இயக்கத்தில் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், யுவன்ஷங்கர்ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். துபாயில் நடைபெற உள்ள இசை ஆல்பம் நிகழ்ச்சிக்காக நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா உள்பட பிரபல இசைக்கலைஞர்களுடன் யுவன்ஷங்கர்ராஜா இருப்பது போல அந்த வீடியோவில் உள்ளது. அந்த வீடியோவின் பின்னணியில் இசையும் ஒலிக்கிறது.
இந்த வீடியோவை யுவன்ஷங்கர்ராஜா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் ரசிகர்கள் யுவன்ஷங்கர்ராஜா பயன்படுத்தியுள்ள பி.ஜி.எம். பீஸ்ட் படத்தில் அனிருத் பயன்படுத்தியுள்ள இசை என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு, யுவன்ஷங்கர் ராஜா ரசிகர்கள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு, அனிருத் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், சமூக வலைதளங்களில் அனிருத் ரசிகர்களுக்கும், யுவன்ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. 1997ம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இவரது இசைக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
தனுஷின் 3 படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்