இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து தனது வருத்தத்தையும் மனநல பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய தேவையையும் பற்றி பேசியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.


விஜய் ஆண்டனி


 மன உளைச்சலின் காரணமாக  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின்  மகளான மீரா கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் நடிகர் விஜய் ஆண்டனிக்கு  தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மனநல பிரச்சனைக் குறித்து பேசவேண்டிய தேவையை பற்றி பதிவிட்டுள்ளார்.  






” விஜய் ஆண்டனியில் இழப்பை நினைத்து நான் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். ஒரு தந்தையாக என்னால் விஜய் ஆண்டனி இதை எப்படி தாங்கிக் கொள்வார் என்று  கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை.  ஈடில்லாத இந்த இழப்பை தாங்கிக்கொள்ள கடவுள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஊக்கத்தை கொடுக்க வேண்டும்  என்று நான் வேண்டிக் கொள்கிறேன். மனநல பிரச்சனை எவ்வளவு கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பதை இந்த வலி நிறைந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  தங்களது தினசரி வாழ்க்கையில்  மன அழுத்தங்களுடன் மெளனமாக  போராடி வருகிறார்கள்


மனம் விட்டு பேசுங்கள்:


 எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் வாழ்க்கை கஷ்டமானதாக மாறிவிடுகிறது. அப்படியான தருணங்கள் ஒருவரை நம்பிக்கையை இழக்கச் செய்து விடுகின்றன. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில்  அன்பும் நம்பிக்கையும் ஒரு நல்ல எதிர்காலமும் தங்களுக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஒருவர் இழந்துவிடுகிறார். இப்படியான நேரங்களில் குறிப்பாக இளைஞர்கள் உதவியை நாடவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களது வலியை ஏற்றுக் கொண்டு  அதை பிறரிடம் பகிர்ந்துகொள்வது கஷ்டமானதாக இருக்கலாம். என்னுடைய கஷ்டமான காலங்களில் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பேச முயற்சித்தால் உங்களுக்கு உதவி செய்வதற்காக பல நபர்கள் தயாராக இருக்கிறார்கள்.


யாரோ ஒருவர் சொன்னது போல் நம் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவது கடினமானது தான். சில நேரங்களில் அது வலி நிறைந்ததும் கூட.  நீங்கள் கஷ்டமான  நேரங்களில் உங்களை இருள் சூழ்ந்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேற உங்களுக்கான எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டதாக உணர்கிறீர்கள். ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே உங்களுக்கு இருக்கிறது அதன் அளவு சின்னதாக இருப்பதால் நீங்கள் அதிலிருந்து வெளியேறி தப்பிக்க முடியாது . அதன் வழியாக சூரிய ஒளி மட்டுமே உங்களுக்கு வந்து போகும். நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தைக் கடந்து வெளி உலகத்தில் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது எனப்தை உணர்த்துவதற்காகவே அந்த ஜன்னல் இருக்கிறது. அதுதான் உங்களுக்கு போராடுவதற்கான நம்பிக்கை அளிக்கிறது.


இதுவும் கடந்து போகும். “ என்று அவர் கூறியுள்ளார்.