இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் மிக முக்கியமான டாப் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். 1996 ம் ஆண்டு தனது 16வது வயதில் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைக்க துவங்கிய யுவன், இன்று 25 ஆண்டுகளை கடந்து இசை காதலர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். பிஜிஎம் என்றாலே யுவன் தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள், டைரக்டர்கள், பிரபலங்களின் மனங்களை கவர்ந்த யுவன், பிஜிஎம் கிங் என அனைவராலும் புகழ்ப்படுகிறார். திரைத்துறையில் தனது 25 ஆண்டு பயணம் குறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி யுவன் சங்கர் ராஜா, "இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வளர்ச்சியையும் தாழ்வையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் என்றைக்கும் உங்களுடைய சப்போர்ட் இருக்கும் என்று நம்புகிறேன். அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன" என்று உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் பேசினார். மனதை மயக்கும் இசையை வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவர் மட்டும் தான். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ள யுவன்சங்கர் ராஜா, கோலிவுட்டின் டாப் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் பணியாற்றி விட்டார்.
இதுவரை இசையமைப்பாளராக மட்டும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் ஆனார். அதையடுத்து இப்போது ஏலிஸ் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களை யுவன் சங்கர் ராஜா தற்போது தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நீண்ட பயணத்தில், இசை ரசிகர்களை அள்ளி குவித்திருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை தொடர்ந்து இசைத்து வருகிறார். நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மீடியாக்களை சந்தித்து, இதுவரை தனக்கு அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்தார் யுவன். அதோடு தனது வருங்கால பிளான் பற்றியும் யுவன் ஓப்பனாக பேசி உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு திரைப்படம் இயக்கப்போகிறார் என்று சில நாட்களாக அரசல் புரசலாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்து இந்த சந்திப்பில் அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எக்ஸ்க்ளூசிவ் பதில்கள் சொன்னதுடன் பல அப்டேட்டுக்களை வெளியிட்டார். அதோடு சேர்த்து புதிய சர்பிரைஸ் ஒன்றையும் ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார். அதுஎன்னவென்றால், இசையமைப்பாளராக இருந்த யுவன் சங்கர் ராஜா இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார் என்பதை உறுதி செய்தது மட்டுமின்றி, அந்த திரைப்படத்தில் யார் ஹீரோ என்று கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார். இந்த திரைப்படம் வழக்கமான ஹீரோ சப்ஜெக்டாக இல்லாமல், ஹீரோயின் மையப்படுத்திய படமாக இருக்குமாம். பெண்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2023 ஆண்டு தொடக்கத்தில் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.