யுவன்ஷங்கர்ராஜா வாழ்கை கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு அவரே பதிலளித்துள்ளார்.
யுவனுக்கு சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் நல்ல அடையாளமாக அமைந்தது. அதுவரை கிராமத்து,கானா என கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை யுவனின் புதுவிதமான இசை கவர்ந்தது. இசையை வகை வகையாக பிரிந்து இதில் இந்த இசையமைப்பாளர் சிறந்தவர் என எல்லோராலும் சொல்லி விட முடியும். அந்த வரிசையில் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையில் சிறந்தவர் யார் என கேட்டால் அந்த நிச்சயம் யுவனின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
அந்த வகையில் அன்றும் இன்றும் என்றும் மாஸ் காட்டும் யுவன் இடையில் இசைக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். இப்போது மீண்டும் இசையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் இசையில் குருதியாட்டம், விருமன் ஆகிய படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து காஃபி வித் காதல், ஏஜென்ட் கண்ணாயிரம், பரம்பொருள்,லவ் டுடே, ராம் - நிவின் பாலி இணையும் படம் என மீண்டும் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக யுவன் மாறியுள்ளார்.
யார் நடித்தால் நன்றாக இருக்கும்
அண்மையில் தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய யுவன்ஷங்கர்ராஜா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் உங்களது வாழ்கை கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த யுவன், “ நானே நடித்து விடுகிறேன் என்று சிரித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் அந்த மாதிரியான ஐடியா ஏதும் இல்லை” என்று பதிலளித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா பிறந்த கதை
யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தையும், இசைஞானியுமான இளையராஜா வித்தியாசமான முறையில் வாழ்த்தினார். ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் யுவன் பிறந்த தினத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். ஒரு காலத்துல ஆழியார் அணை இருக்கும் இடத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் கம்போசிங் ஆக செல்வோம். 2,3 நாட்களுக்கு அங்கு இருந்து ஒரு 4,5 படங்களுக்கு கம்போசிங் பிளான் போடுவோம். அப்படியான ஒரு நாள் மறைந்த இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கேஆர்ஜி, எனது பக்கவாத்திய குழுவோடு சென்றிருந்தோம்.
இதில் கேஆர்ஜியின் வீடு கோவையில் இருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்று திரும்பி வருவார். அப்படி ஒருநாள் மதியம் போய்விட்டு சாயங்காலம் வந்து என்னிடம் ஏய் உன் மனைவிக்கு பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னை பாருங்க..மனைவி பிரசவம் கூட அவரோடு இருக்க முடியாத சூழல். அவங்களும் அதை பெருசா எடுத்துக்கல. அன்னைக்கு பிறந்த குழந்தை தான் யுவன்...நான் கம்போஸ் பண்ண படத்தின் பெயர் ரஜினி நடித்த ஜானி, அந்த பாடல் செனரிட்டா ஐ லவ் யூ...” என்று பேசியிருந்தார்.