சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரிய பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.


 






இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, "மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னையை பரிசீலிப்பதற்கான சரியான இடம் நாடாளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பாக விரிவாக பேசிய நீதிமன்றம், "விளம்பரத்திற்காக நாங்கள் ஏன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். உங்களுக்கு இருக்கும் சில பார்வை எங்களுக்கும் இருக்கலாம். ஆனால், இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டிய சரியான இடம் நாடாளுமன்றமே. அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கொள்கை முடிவான இதை எங்களால் மாற்ற முடியாது. 


 






எனவே, இதுகுறித்து விசாரணை செய்ய மறுக்கிறோம். தள்ளுபடி செய்கிறோம். சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது" என தெரிவித்தது.


ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலரும் வழக்கறிஞருமான கே.ஜி. வன்சாரா என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தார். சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.


 






அத்தகைய நடவடிக்கை, நாட்டின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் இந்தியை வழங்கும் தற்போதைய அரசியலமைப்பு விதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.