இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்ததினம். சோஷியல் மீடியாவைத் திறந்தால் யுவன் பாடல்கள் அருவியாய் கொட்டுகின்றன. நடிகர்களால் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் பலரும் இசையால் யுவனுக்காக இணைந்திருக்கிறார்கள். ரீங்காரமிட்டு ஒரு போதையுடன் நமக்குள் நுழையும் யுவனின் குரல் குறித்து எழுதித் தள்ளுகிறார்கள். பூப்பூக்கும் காதலுக்கு யுவன் உரமிடுகிறார். பட்டுப்போன காதலுக்கு யுவன் வருடிக்கொடுக்கிறார். அம்மா என்றால் அன்பை அள்ளி வீசுவார், அப்பா என்றால் பாசத்தை பல மடங்கு தருகிறார். 


யார் தேடினாலும் யுவனிடம் பதில் இருக்கிறது. யாருக்கும் யுவனிடம் ஒரு கரிசனம் கிடைக்கிறது. எந்த மனநிலையில் தட்டினாலும் யுவனிடமிருந்து இசை கொட்டுகிறது. இப்படி பாடலும், குரலும் என யுவனை புகழ்ந்துகொண்டே போகலாம். அந்த வகையில் யுவனிடம் குறிப்பிட்டு கூறவேண்டிய ஒன்று பின்னணி இசை. பிஜிஎம் கிங் என்று கூட சொல்லலாம். யுவனின் பின்னணி இசைக்கென ஒரு ரசிகர்கள்  கூட்டம் உண்டு. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, சக இசையமைப்பாளர்கள் உட்பட சினிமாத்துறையிலேயே யுவனின் பின்னணி இசையை ரசித்து லயிக்க பெருங் கூட்டம் உண்டு.




படத்தின் நாயகனுக்கே மாஸ் பிஜிஎம் என்ற வரையறை எல்லாம் யுவனிடம் இல்லை. யுவனின் தெறிக்கவைக்கும் பிஜிஎம்கள் நாயகன், நாயகி, காமெடியன், வில்லன் என அனைத்து கதாபாத்திரத்தையும் அழகூட்டி இருக்கிறது. காமெடிக்கு இப்படி ஒரு பிஜிஎம்மா என தலைநகரம் படத்தில் யோசிக்க வைத்திருப்பார் யுவன். வடிவேலுக்கு மாஸ் பிஜிஎம் கொடுத்து பின்னியெடுத்து இருப்பார். க்ளாஸ், மாஸ், சோகம் என யுவன் இசை பேசாத இடமே இல்லை. 



மன்மதன், வல்லவன், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பருத்திவீரன், பையா, மங்காத்தா, பில்லா, ஆரம்பம், அஞ்சான், மாஸ், திமிரு, சண்டைக்கோழி, சர்வம், ஆதிபகவன், AAA,சென்னை 28 என யுவன் தெறிக்கவிட்ட பிஜிஎம்கள் ரசிகர்கள் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும். குறிப்பிட்ட காட்சியின் புகைப்படத்தைப் பார்த்தால் கூட அந்த பிஜிஎம் நம்மை அறியாமல் நம் தலைக்குள் ஓடும்.


 



மாஸ் பிஜிஎம் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடாத யுவன் க்ளாஸ் பிஜிஎம்மில் அசரடிப்பார். பருத்திவீரன், 7ஜி ரெயின்போ காலனி, கற்றது தமிழ், மெளனம் பேசியதே, பையா, காதல் கொண்டேன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களில் யுவனின் இசைதான் காட்சிகளுக்கே உயிர் கொடுத்திருக்கும். 'மெளனம் பேசியதே' படத்தின் ஹம்மிங் இன்றும் எத்தனையோ செல்போன்களில் ரிங்டோன்.  



நெருப்பு பற்றி எரியும் மங்காத்தா சண்டைக்காட்சியில் வயலின் இசைக்கவிட்டு வித்தியாசம் காட்டியது, தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் என் ஜன்னல் வந்த காற்றே பாடலில் மெலடி, வெஸ்டன், போல்க் என 3 விதமான மெட்டுகளை கொடுத்து நாயகிகளை அறிமுகம் செய்தது என யுவனை தனித்துச் சொல்ல பல படங்கள் உள்ளன. 


 



இசை, பாடல், பிஜிஎம் என இசையுலகில் முடிசூடா மன்னனாக தனித்து நிற்கும் யுவன் தமிழ்த்திரையுலகின் வரம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைக்கான இசை, இன்றைய ரசிகர்களுக்கான இசை என எந்த வட்டத்துக்குள்ளும் போகாமல் இசையில் தனக்கென உள்ள தனி ஸ்டைலை இனி வரும் காலமும் யுவன் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.