சேலத்தில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கருடன் படம் சிறப்பாக வந்துள்ளது. மே மாதம் 31-ஆம் தேதி கருடன் படம் திரைக்கு வரவுள்ளது. கருடன் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். விடுதலை திரைப்படத்தை வேறு ஒரு பரிமாணத்தில் பார்த்த சூரியைப்போல கருடன் படத்தில் வேறு ஒரு சூரியை பார்ப்பீர்கள். பல ஆக்ஷன் படங்கள் தான் பல நடிகர்களை உருவாக்கியது.


நல்ல கதையாக இருந்தால், மக்கள் வாழ்வில் ஒன்றிவரும் கதையாக இருந்தால் காமெடி படமாக இருந்தாலும் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அது மக்களுக்கு பிடிக்கும்.


காமெடி நடிகராக இருந்த எனக்கு விடுதலை படம் மூலம் வேறு ஒரு கதைக்களம் அமைந்தது. அதேபோல் கருடன் படத்தில் எமோஷனல் ஆக்ஷன் இரண்டும் கலந்ததாக இருக்கிறது. கருடன் படத்தில் என்னை வேறு ஒரு பரிமாணத்தில் மக்கள் பார்ப்பார்கள்” என்று கூறினார். 



”ஒரு காமெடியனாக நடித்தால் அப்படத்தில் என் கதாபாத்திரம் மூலம் என்னுடைய பங்களிப்பு அந்த படத்தின் வெற்றிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என எனக்கு தோன்றும்.


கதையின் நாயகனாக வந்த பிறகு பொறுப்புகள் அதிகமாக உள்ளது. என்னுடைய காட்சிகளை மட்டும் நான் பார்க்க முடியாது. ஒட்டுமொத்த படத்திலும் எனது பங்களிப்பை இறுதிவரை இருக்க வேண்டும். சினிமாவில் யாருக்கும் நிரந்தரமான இடம் கிடையாது. ஒருவர் ஒரு பொறுப்பை விட்டு மேல் இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தை நிரப்ப நிச்சயம் மீண்டும் ஒருவர் வருவார். 


மீண்டும் காமெடியனாக நடிப்பீர்களோ என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் காமெடியனாக நடிக்க தயார் என்றார்.


விடுதலை பாகம் ஒன்று வெற்றியை விட விடுதலை பாகம் 2 நான்கு மடங்கு வெற்றியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்த அவர் விடுதலை பாகம் 2 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்” என்றார்.


மேலும் ”போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும்” என்ற சூரி, ”கதை களத்திற்காக மட்டுமே திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்படுவதாகவும், சினிமாவில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளபோது அதை மட்டுமே மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.



”லாரன்ஸ் மாஸ்டர் சமூக சேவைக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் அவர் நடத்திய விழாவில் கலந்து கொண்டுள்ளேன்” என்று கூறினார். 


”நாடாளுமன்றத் தேர்தலின்போது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போனது. நானும் உங்களைப் போன்று ஒரு சாதாரண மனிதன் தான். இந்த முறை பொதுமக்கள் பலருக்கு இதுபோன்று பெயர் நீக்கம் செய்ததாக கேள்விப்பட்டேன். சூரி நடிகர் என்பதால் அது வெளியே வந்தது. ஆனால் சூரியைப் போன்று பலருக்கு இந்த முறை வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் இதனை சரி செய்வதாக கூறியுள்ளனர்” என்றார். 


இளையராஜா, வைரமுத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர். இரண்டு பக்கமும் நியாயம் உள்ளது என்பதால் அவர்கள் பேசினர். அதை நாம்தான் பெரிது படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இருவரும் சரியாகத்தான் உள்ளார்கள்” என்று கூறினார்.