சிறுநீரக செயலிழப்பால் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான ‘தென்றல் வரும் தெரு’ படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், ‘நான் பெத்த மகனே’, ’சுந்தரா டிராவல்ஸ்’, ‘அன்பு’, ’திருமலை’, ’ஐயா’, ‘ஆயுதம்’, ’வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘படிக்காதவன்’, ‘மருதமலை’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த இரு வாரத்திற்கு முன் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் தனக்கு உதவ வேண்டும் என போண்டா மணி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவருக்கு உதவி செய்தனர். தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போண்டா மணியை வீட்டிற்கு வந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உதவுவது போல நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராஜேஷ் ப்ரீத்திவ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடியது யார்?
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், மருத்துவமனையில் போண்டா மணி சிகிச்சையில் இருந்த போது அவருக்கு ராஜேஷ் என்பவர் அறிமுகமாகி உதவிகளை செய்துள்ளார். அதனைப் பார்த்து நம்பிய போண்டாமணியின் மனைவி தேவி அவரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். இதனை வாங்கிய ராஜேஷ் அதன்மூலம் நகைக்கடை ஒன்றில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கியுள்ளார். தன் செல்போனுக்கு வந்த குறுந்தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவி, இதுதொடர்பாக போரூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விழுப்புரம் அருகே பதுங்கியிருந்த ராஜேஷைக் கைது செய்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்