பயணிகள் காரில் 6 ஏர் பேக்குகள் பொருத்துவது கட்டாயம் என்ற விதிமுறையை அரசு அக்டோபர் 1, 2023 தள்ளிவைத்துள்ள நிலையில் சர்வதேச சாலை கூட்டமைப்பானது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அந்த அறிவிக்கையையே முழுமையாக திரும்பப் பெறுமாறு கோரியுள்ளது. காரணம் கார் பயணிகள் சீட் பெல்ட் அணியும் பழக்கத்தை கட்டாயம் பின்பற்றும் சூழல் உருவாகாத வரை இந்தச் சட்டம் அமலானால் அது விபத்தின் போது இன்னும் தீவிர காயங்களுக்கே வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
மேலும் பின் இருக்கையில் உட்காரும் 85% பேராவது சீட் பெல்ட் அணியும் பழக்கத்துக்கு வந்தபின்னரே 6 ஏர் பேக் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சாலை கூட்டமைப்பின் தலைவர் கே.கே.கபிலா வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு உலகளாவிய ஆய்வுகளும் சீட் பெல்ட் அணியாமல் ஏர் பேக் பொருத்தும் நடைமுறை தோல்வியில் முடிந்துள்ளதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் 70 சதவீத இருச்சக்கர வாகன விபத்து உயிரிழப்பானது ஹெல்மெட் அணியாததாலேயே ஏற்படுகிறது. அதேபோல் 87 சதவீத கார் விபத்து உயிரிழப்பானது சீட் பெல்ட் அணியாததாலேயே ஏற்படுகிறது. அதேபோல் காரில் பின் இருக்கையில் அமரும் 96 சதவீத பயணிகள் சீட் பெல்ட் அணிவதில்லை. எனவே நாம் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். முதலில் கடுமையான தண்டனைகள் கசப்புகளை உண்டாக்கலாம் ஆனால் போகப்போக பழகிவிடுவார்கள் என்றும் கே.கே.கபிலா தெரிவித்துள்ளார்.
மிஸ்த்ரி விபத்தும் தடை உத்தரவுகளும்..
மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் அண்மையில் ஒரு விபத்து நடந்தது. அதிவேகமாக சென்ற காரில் பின் சீட்டில் அமர்ந்து மிஸ்திரி பயணித்தார். அப்போது, அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், அதனாலேயே இடித்த வேகத்தில் அவர் முன் திசையில் தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டும் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட்களை கட்டாயம் பயன்படுத்துவது குறித்து பேசிய நிதின் கட்கரி, அபராதம் வசூலிப்பது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் ஆனால் விழிப்புணர்வை பரப்புவதே நோக்கமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். பிரபலங்கள் சாலைப் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு செய்வதாக கூறிய அவர், ஊடகங்களின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும் தெரிவித்தார்.
"ஏற்கனவே, பின் இருக்கையில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஆனால் மக்கள் அதை பின்பற்றுவதில்லை. பின் இருக்கையில் இருப்பவர்கள் முன் இருக்கைகளைப் போல பெல்ட் அணியாமல் இருந்தால் சைரன் ஒலிக்கும். மேலும் அவர்கள் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
2024க்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாய் ஆகும். கேமராக்கள் உள்ளன. எனவே, விதிகளை பின்பற்றாதவர்களை எளிதாக கண்டு பிடிக்கலாம்" என்று கட்கரி கூறினார். மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், சாலை விபத்துக்களில் சிக்கி 59,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 80,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று நெடுஞ்சாலை போலீசார் இன்று வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI